கடகம்பாடி வாசுதேவப் பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில், கடகம்பாடி, திருவாரூர் மாவட்டம் -609 503. போன்: +91 4366 273600
இறைவன்
இறைவன்: வாசுதேவப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
அறிமுகம்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடகம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள வாசுதேவப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் வாசுதேவப் பெருமாள், அவரது துணைவிகளான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். பவ்ய ஆஞ்சநேயருக்கு மாதம்தோறும் மூல நட்சத்திரத்தன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. மாசிமாத புனர்பூசம் துவங்கி மூல நட்சத்திரம் வரை லட்சார்ச்சனை நடக்கிறது.மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது.
புராண முக்கியத்துவம்
ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன்.மற்றவர்களெல்லாம், ராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் ராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் “நாராயணா’ என்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக பூலோகத்திலேயே தங்கியிருக்க ஸ்ரீராமனிடம் வரம் பெற்றார். சோழ மன்னர் ஒருவர் காவேரி ஆற்றின் கிளைநதியான அரசலாற்றின் கரையோரம் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வாசுதேவபெருமாளுக்கு கோயில் எழுப்பினார். அங்கே பவ்ய ஆஞ்சநேயருக்கு சன்னதியும் எழுப்பப்பட்டது. இவர் பக்தர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார். சரபோஜிராஜபுரம் என அழைக்கப்படும் கடகம்பாடியில் இக்கோயில் உள்ளது.
நம்பிக்கைகள்
திருமணத்தடை, உடல் உபாதை, மனசஞ்சலம், வியாபாரத்தில் சரிவு, குழந்தையின்மை போன்ற குறைகள் நீங்கவும், ஞானம், பலம், பக்தி, வீரம், கீர்த்தி, சேவை, அடக்கம் ஆகிய குணங்களைப் பெறவும் இங்குள்ள பவ்ய ஆஞ்சநேயரை வழிபட்டு வரலாம்.
சிறப்பு அம்சங்கள்
ஆஞ்சநேயர் சிறப்பு: ஆஞ்சநேயர் கைகட்டி, வாய்பொத்தி, பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதித்து வருகிறார். மக்களின் குறைகளை போக்கி அருள்பாலித்து வரும் இவரை வழிபட சனி மற்றும் வியாழக்கிழமைகள் ஏற்றவை. இந்த நாட்களில் பக்தர்கள் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து குறைகளை ஆஞ்சநேயரிடம் எடுத்துச் சொல்லி நிவர்த்தி அடைகிறார்கள். அமாவாசை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. அன்று இவரை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்
மூல நட்சத்திரத்தன்று விசேஷ ஹோமம், மாசிமாதம் லட்சார்ச்சனை, அனுமன் ஜெயந்தி, ஆனி திருமஞ்சனம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடகம்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பூந்தோட்டம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி