ஓடாச்சேரி வேதபுரீஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி :
ஓடாச்சேரி வேதபுரீஸ்வரர் சிவன் கோயில்,
ஓடாச்சேரி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்:
வேதபுரீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
திருவாரூர் – கங்களாஞ்சேரி –நாகூர் சாலையில் உள்ள சூரனூரின் தெற்கில் 5 கிமீ தூரத்தில் உள்ளது இந்த கிராமம். நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவரர் கோயில் கல்வெட்டு மூலம் தருமை முதல்வர் குருஞான சம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசருக்கு கி.பி. 1560இல் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் சிக்கல், வடகுடி, ஓடாச்சேரி முதலிய கோயில்கட்கு கமலை ஞானப்பிரகாசர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். இக்கல்வெட்டின் மூலம் 500 ஆண்டுகளின் முன்பே இந்த ஓடாச்சேரியில் கோயில் இருந்தமைக்கான சான்று உள்ளது. ஆனால் பழங்கோயில் முற்றிலும் சிதைந்து போனதால் பல வருட முயற்சிக்கு பின்னர் புதிய கோயில் 2018ல் குடமுழுக்கு கண்டது.
பெரிய வளாகத்தில் கோயில் முற்றிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது, முகப்பு வாயிலில் ஒரு சுதை வேலைப்பாடுகளுடன் அலங்காரவளைவு அமைக்கப்பட்டுள்ளது. வாயிலில் சிறிய மாடத்தில் ஒரு விநாயகர் உள்ளார். இறைவன் வேதபுரீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். வேதங்கள் இங்கு வந்து வழிபட்டதால் வேதபுரீஸ்வரர் என பெயர் வந்ததாக கூறுகின்றனர். இறைவன் முன்னர் ஒரு முகப்பு மண்டபம் உயர்ந்து நிற்கிறது, இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய தனி கோயில் கொண்டுள்ளார். அவரது முன்னம் ஒரு உயர்ந்த மண்டபம் உள்ளது. இறைவன் முன்னர் ஒரு சிறிய நந்தி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர் முருகன் இருவருக்கும் தனி சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறை கோட்டத்து மூர்த்தியாக தென்முகன் மட்டும் உள்ளார். வடகிழக்கில் சனி, பைரவர் சூரியன் லிங்கபாணம் ஒன்றும் உள்ளன. கோயில் புதிதாக இருந்தாலும், உள்ளூர் மக்கள் அதிகம் கொண்டாடுவதாக தெரியவில்லை.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓடாச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி