ஒன்னிப்பாளையம் ஸ்ரீ ராஜாமாரி அம்மன் திருக்கோயில், கோயம்பத்தூர்
முகவரி :
ஒன்னிப்பாளையம் ஸ்ரீ ராஜாமாரி அம்மன் திருக்கோயில்,
காரமடை ரோடு, பிலிச்சி பஞ்சாயத்து,
ஒன்னிபாளையம்,
கோயம்பத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு – 641 019.
தொலைபேசி: +91 98422 72280, 97508 42500
இறைவி:
ஸ்ரீ ராஜாமாரி அம்மன்
அறிமுகம்:
ஒன்னிப்பாளையம் ஸ்ரீ ராஜாமாரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஒன்னிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீ ராஜாமாரி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ ராஜா மாரி அம்மன் கோயிலின் காவல் தெய்வமான கருப்பராயன், முகத்தில் புன்னகையுடன் கையில் அரிவாளுடன் கோயில் வாசலில் காட்சியளிக்கிறார். ஸ்ரீ ராஜா மாரி அம்மன் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயில். அன்னை ராஜாமாரி அம்மன் ஒன்னிப்பாளையம், ஒன்னிபாளையம் புதூர், கரிச்சி பாளையம், சென்னி வீரம் பாளையம், கல்லிபாளையம் ஆகிய கிராமங்களைத் தவிர வேறு எந்த இடத்திலிருந்தும் தம்மிடம் வரும் பக்தர்கள் அனைவரையும் காக்கிறார்.
புராண முக்கியத்துவம் :
பல வருடங்களுக்கு முன், ஒன்னிபாளையத்தில் வசித்த மக்கள், சத்தியமங்கலம் அருகிலிருக்கும் கொத்தமங்கலத்திற்குச் சென்று அங்கே கோயில் கொண்டிருந்த அம்மனை வழிபட்டு வந்தனர். அங்கு விவசாயம் செழித்தும், மக்கள் வசதி வாய்ப்போடும் இருப்பதற்கு அந்த அம்மனே காரணம் என நம்பினர். அதுபோல் நம் ஊரிலும் ஒரு கோயில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணினர். அதை அந்த அம்மனிடமும் கோரிக்கையாக வைத்தனர். அச்சமயத்தில் ஒருநாள், ஒன்னிபாளையத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவரை ஆட்கொண்ட அம்மன், நான் கொத்தமங்கலத்துக்காரி இப்போது உங்கள் ஊரில் நிலைகொள்ள வந்திருக்கிறேன். எனக்கு இங்கு கோயில் எழுப்பினால், சுற்றியுள்ள எட்டு ஊர்களையும் ஏகபோகமாக வாழவைப்பேன் என்று அருள்வாக்குக் கூற, அப்படி அமைந்ததுதான் ஒன்னிப்பாளையம் ராஜமாரியம்மன் கோயில். துவக்கத்தில் சிறிய ஓலைக்குடிலில் அம்மனை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். ராஜமாரியம்மன் அருளால் அந்த சுற்றுவட்டார மக்கள் வாழ்வு செழிக்க, கோயில் படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அன்னையை கொத்தமங்கலத்து தாய், ஆயிரங்கண்மாரி என்றெல்லாம் அழைக்கிறார்கள் பக்தர்கள்.
நம்பிக்கைகள்:
திருமண பாக்கியம் கிட்டாதவர்கள், ராஜமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பதாக நேர்ந்து கொண்டால், அம்மனின் ஆசி கிட்டி, திருமணம் விரைவில் நடந்தேறும். அம்மை நோய், கண்நோயினால் பாதிக்கப்பட்டோர் இவளை வேண்டி குணம் பெறுகிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
திருமண பாக்கியம் கிட்டாதவர்கள், ராஜமாரியம்மனுக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பதாக நேர்ந்து கொண்டால், அம்மனின் ஆசி கிட்டி, திருமணம் விரைவில் நடந்தேறும். அம்மை நோய், கண்நோயினால் பாதிக்கப்பட்டோர் இவளை வேண்டி குணம் பெறுகிறார்கள்.
விழாக்காலங்களில் இங்குள்ள கருப்பராயனுக்கு விசேஷ பூஜையும், படையலும் உண்டு. இவரிடம் வேண்டினால் துஷ்டர்களும், நம்பிக்கை துரோகிகளும் நம்மை விட்டு விலகுவர் என்பது நம்பிக்கை. இங்குள்ள விநாயகர் சம்பந்தமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்கு முன் கோயில் பொருட்களை திருடுவதற்காக திருடர்கள் வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை கோயிலின் முன்புறம் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்கூட்டியே அறிந்து, அம்மனிடம் தெரிவிக்க, அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை. ஆத்திரமுற்ற கள்வர்கள், அங்கிருந்த பிள்ளையாரின் தலையை வாளால் வெட்டி விட்டார்கள். அதைக் கண்டு கடுங்கோபமுற்ற ராஜமாரியம்மன், அந்தத் திருடர்களை சபித்து கல்லாக்கிவிட்டார். தலை வெட்டுப்பட்ட இந்தப் பிள்ளையாரை தலைவெட்டி பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். கோயிலின் முன்புறம் இன்றும் இவரை தரிசிக்கலாம்.
திருவிழாக்கள்:
ராஜமாரியம்மனுக்கு துணையாக தனிச்சன்னிதியில் பத்திரகாளியம்மனும் வீற்றிருக்கிறாள். இவளுக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை சிறப்பாக நடக்கிறது. பிராகாரத்தில் துர்க்கை, பார்வதி மற்றும் மகாலட்சுமி, சப்தகன்னியர் அருள்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும், அமாவாசையன்றும் இரவு சிறப்பு பூஜையுடன் அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் ஏக விசேஷம். எட்டு ஊர் மக்களின் குலதெய்வமான ராஜமாரியம்மனுக்கு வருடந்தோறும் தை மாதத்தில் பூச்சாட்டு விழா பதினைந்து நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒன்னிபாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்