எர்ணாகுளம் காலடி திருக்காலடியப்பன் திருக்கோயில் (கிருஷ்ணர் கோயில்), கேரளா
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/download-153.jpg)
முகவரி :
அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில்,
காலடி தேவஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்,
காலடி, – 638 574.
எர்ணாகுளம் மாவட்டம்.
கேரளா மாநிலம்.
போன்: +91- 93888 62321.
இறைவன்:
கிருஷ்ணர்
அறிமுகம்:
காலடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கிராமமான காலடியில் அமைந்துள்ள மிகவும் புனிதமான ஆலயமாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் சமயச் செயல்பாட்டாளரும் தத்துவஞானியுமான ஜகத்குரு ஆதி சங்கர பகவத்பாதர் பிறந்த புனித ஸ்தலம் காலடி. காலடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் சிருங்கேரி மடத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கிருஷ்ணர் ஜகத்குருவின் குலதெய்வமாகவும், கோயிலின் முதன்மைக் கடவுளாகவும் இருக்கிறார். இந்த கிருஷ்ணர் கோவில் கேரள கட்டிடக்கலை பாணியில் உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கரரின் அன்னை ஆர்யாம்பா தகனம் செய்யப்பட்ட இக்கோயில் வளாகத்தில் உள்ள ஆர்யாம்பாவின் பிருந்தாவனம் அவசியம் பார்க்க வேண்டிய தலம். ஸ்ரீஆதி சங்கரர் காலத்திலிருந்தே இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு அருகில் கருங்கல்லால் ஆன விளக்கு கம்பம் உள்ளது. இதன் அருகில் கணபதி சன்னதியும் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இவர் சிவனின் அம்சமாக அவதரித்தவர். கேரள மாநிலம் காலடியில் வசித்து வந்த சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இவர்கள் திருச்சூர் வடக்குநாதரிடம் குழந்தை வேண்டி வழிபட்டனர். சிவனின் கருணையால் கி.பி.788ல் இந்த தம்பதியினருக்கு ஆதிசங்கரர் அவதரித்தார். சங்கரரின் 3வது வயதில் அவரது தந்தை காலமானார். உறவினர்கள் உதவியுடன் சங்கரர் 5 வயதிற்குள் சாஸ்திரங்களை பயின்றார். 7 வயதிற்குள் வேதங்களை பயின்ற சங்கரர், திருமணம் செய்யாமல், தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்தார். பின்னர் தாயின் அனுமதியை சமயோசிதமாகப் பெற்று, துறவு மேற்கொண்டார்.
பொன் மழை: சங்கரர் தனது குருகுல வாசத்தின் போது தினமும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்ப்பணித்த பிறகு, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சங்கரர், மறுநாள் துவாதசி திதியில் பிட்சை கேட்டு, அயாசகன் என்ற ஏழை வீட்டு வாசலில் நின்று “பவதி பிட்சாம்ம் தேஹி’ என்றார். வெளியே வந்த பெண்மணியிடம் உணவேதும் இல்லை. ஆயினும், தன்னிடம் உணவு கேட்டு வந்த பாலகனை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், காய்ந்து போன நெல்லிக்கனியை தானமாக வழங்கினாள். சங்கரரின் கண்கள் குளமாகின. பிஞ்சு பாலகனின் நெஞ்சை உலுக்கிய இந்த செயல் உணர்ச்சி பிழம்பாக உருவெடுத்தது. உடனே சங்கரர், அந்த பெண்ணின் வறுமையை போக்க நினைத்து, தன் குலதெய்வம் மகாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியை குறித்து ஸ்தோத்திரம் பாடி துதித்தார். 19வது ஸ்தோத்திரம் பாடி முடித்தபோது, மகாலட்சுமியின் கருணையால் ஏழை பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. அதுவே “கனகதாரா ஸ்தோத்திரம்’ என பெயர் பெற்றது.
காலடி– பெயர்க்காரணம் : சங்கரரின் தாய் தினமும் நீண்ட தூரம் நடந்துசென்று பெரியாறு ஆற்றில் குளித்து அங்கிருந்த கண்ணனை தரிசனம் செய்து வந்தார். வயதாகிவிட்டதால், அவரால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. ஆனால், பெரியாற்றில் குளிக்காமல் இருக்கவும் முடியவில்லை. அம்மாவின் நிலை குறித்து சங்கரருக்கு வருத்தம் உண்டானது. அவரது ஆசையை நிறைவேற்ற கண்ணனை பிரார்த்தனை செய்தார். அப்போது அசரீரி தோன்றி, “”குழந்தாய்! நீ உனது காலால் அடி வைக்கும் இடத்தில் பெரியாறு உன்னைத்தேடி வரும்,”என ஒலித்தது. என்ன ஆச்சரியம்? சங்கரர் காலால் அடி வைத்த உடனேயே ஆறு ஊருக்குள் புகுந்தது. அப்பழுக்கற்ற பெரியாறு நதி சங்கரரின் தாய் இருக்கும் இடம் தேடி ஓடி வந்தது. அதுவரை “சசலம்’ என்ற பெயருடன் விளங்கிய கிராமம், இந்த நிகழ்ச்சிக்கு பின் “காலடி’ என பெயர் பெற்றது. தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய தன் குலதெய்வத்திற்காக, கி.பி 795ல் தானே ஒரு கோயில் கட்டி அதில் திருக்காலடியப்பனை பிரதிஷ்டை செய்தார் சங்கரர். புதிய வழியில் ஓட ஆரம்பித்த பெரியாறு “பூர்ணா’ என பெயர் பெற்றது. இதில் தான் முதன் முதலில் திருக்காலடியப்பனுக்கு ஆறாட்டு விழா நடந்தது. அன்று முதல் சங்கரரின் தாய் இங்கேயே குளித்து கண்ணனை வணங்கினார்.
முதலைக்கு முக்தி: ஒருநாள் சங்கரர் பூர்ணா நதியில் குளித்துக்கொண்டிருந்தார். அவரது தாய் கரையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு முதலை சங்கரரின் காலை கவ்வியது. தாயின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததும் அலறிவிட்டார். கிராமமே திரண்டது. கொஞ்சம் கொஞ்சமாக முதலையின் வாய்க்குள் சங்கரரின் உடல் செல்ல தொடங்கியது. என்ன நடக்க போகிறது என்பதை அறிந்தார் சங்கரர். சந்நியாசம் வாங்கினால் தான் முதலை விடும். இல்லாவிட்டால் விழுங்கிவிடும் என்பதை தாயிடம் கூறினார். மகன் உயிர்பிழைத்தால் போதும் என்பதால் சந்நியாசத்திற்கு அனுமதி அளித்தார். உடனே முதலை சங்கரரை விடுவித்தது. முன்காலத்தில் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான ஒரு கந்தர்வனே முதலையாக மாறி அந்த ஆற்றில் கிடந்தான். ஆதிசங்கரரின் ஸ்பரிசம் கிடைத்ததும், சாபவிமோசனம் பெற்றான். இந்த ஆற்றில் குளித்து கண்ணனை வணங்கினால் சகல பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
நம்பிக்கைகள்:
குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள் நமஸ்கார மண்டபம் அருகே நின்று கண்ணனை வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள சின்னக்கண்ணனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தைபாக்கியம் வேண்டுபவர்கள், வியாபார விருத்தி, கல்வி, நடனத்தில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்கு நடக்கும் நவதானிய பூஜையில் கலந்து கொள்வார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
தர்மத்தையும் நீதியையும் விட கருணையே பெரியது என நிலைநாட்டியவர் ஆதிசங்கரர். இவரது குலதெய்வம்தான் கேரள மாநிலம் காலடியில் வீற்றிருக்கும் “திருக்காலடியப்பன்’. கண்ணபரமாத்மா தான் திருக்காலடியப்பனாக இங்கு அருள்பாலிக்கிறார். தீவினைகளை கருணையால் மாய்த்த ஆதிசங்கரர் உலகுக்கே உபதேசம் செய்து “ஜகத்குரு’ ஆனார். அவரது குலதெய்வமான திருக்காலடியப்பன் இத்தலத்தில் உன்னி கிருஷ்ணனாக (சின்னக் கண்ணன்) அருள்பாலிக்கிறார். இங்குள்ள கண்ணன் விக்ரகம் 3.5 அடி உயரத்தில் “அஞ்சனா’ எனும் கல்லால் ஆனது. இந்தக்கல்லில் இரும்பு, தாமிரம் அதிக அளவில் கலந்திருப்பதால் இதற்கு சக்தி அதிகம். பெருமாள் தலங்களிலேயே குருவாயூரில் உள்ள கண்ணன் சிலையும், இங்கும் மட்டுமே “அஞ்சனா’ கல்லில் ஆன விக்ரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயில் அமைப்பு: மூலவரான திருக்காலடியப்பன் வலது கையில் வெண்ணெய் வைத்துள்ளார். இடதுகை இடுப்பில் இருக்கிறது. வலது மேல்கையில் சக்கரம், இடது மேல்கையில் சங்கு வைத்திருக்கிறார். பெருமாள் கோயில்களில் கண்ணனின் அருகில் சிவ, பார்வதி அருள்பாலிப்பது இங்கு மட்டும் தான் என்கின்றனர். இதன் அருகே தலவிருட்சமான பவளமல்லி உள்ளது. நுழைவு வாயில் முழுவதும் பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது. இதில் குழலூதும் கண்ணனும், அமர்ந்த நிலையில் ஆதிசங்கரரும் அருளுகின்றனர். கோயிலின் எதிரில் சங்கரரின் தாய் ஆரியாம்பாள் சமாதி உள்ளது.
ஒரு அட்சய திரிதியை நாளில் தான் மகாலட்சுமி இங்கு தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தாள். அதன் காரணமாக ஆண்டு தோறும் அட்சய திரிதியை நாளில் இங்கு கனகதாரா யாகம் சிறப்பாக நடக்கிறது. சங்கரர் வாழ்ந்த 32 ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் 32 நம்பூதிரிகள் இந்த யாகத்தை நடத்துகின்றனர். யாகத்தின் முடிவில் பணம் செலுத்தியவர்களுக்கு பிரசாதமாக தங்கநெல்லிக்கனியும், வெள்ளி நெல்லிக்கனியும், யந்திரமும் வழங்குகிறார்கள்.ஐயப்பன் சன்னிதானத்தின் முன்னால் “தத்வமஸி’ என்று எழுதப்பட்டிருக்கும். “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்’ என்பது இதன் பொருள்.தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர். அவர் அவதரித்த காலடி தலத்தையும், அங்குள்ள திருக்காலடியப்பன் கோயிலையும் ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.
திருவிழாக்கள்:
அட்சய திரிதியை, ஆண்டு தோறும் கண்ணன் பிரதிஷ்டை திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின்போது, தினமும் அபிஷேகம், கலசாபிஷேகம், நவதானிய பூஜை நடக்கும். திருவோணம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, மகரசங்கராந்தி ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை இங்கு விசேஷ நாள்
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2-119.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/3-91.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/3_d5TDeon-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/download-8-2.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/download-153.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காலடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
அங்கமாலி
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி