எருக்கூர் உப்பூச்சி அம்மன் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
எருக்கூர் உப்பூச்சி அம்மன் திருக்கோயில்,
எருக்கூர்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609108.
இறைவி:
உப்பூச்சி அம்மன்
அறிமுகம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் உப்புச்சியம்மன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளாள். எருக்கூர் காளி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். சீர்காழி-சிதம்பரம் சாலையில் ஆறு கிலோமீட்டர் பயணித்து எருக்கூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் புதுமண்ணி ஆற்றங்கரையில் உள்ள உப்பூச்சி அம்மன் கோயிலை சுலபமாக அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆறு பாயும் வனப்பகுதியாக இருந்தது. இங்கு மிகச் சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. அப்போது ஒருநாள் இவ்வூருக்கு தெற்கே போகும் புதுமண்ணி ஆற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு ஒரு பெண் வந்தாள். வழியில் வளையல் வியாபாரி ஒருவர் அவரிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க தலையில் சுமந்து வந்த பானையை இறக்கி தண்ணீர் கொடுக்க முற்பட, அவனோ பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தான். பயந்துபோன அவள் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்த கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை.
என்ன செய்வது என்று தெரியாத அந்தப் பெண் சிதம்பரத்தை நோக்கி தில்லை காளியை நீ காப்பாற்று! என்று கதற சற்றும் எதிர்பாராத வண்ணம், வியாபாரி மீது ஒரு கால் எட்டி உதைத்தது. எருக்கம் செடிகளும் புதர்களும் நிறைந்த பகுதியில் போய் விழுந்த அவனை புரட்டி எடுத்தது. அவளது உடல் முழுக்க இரத்தம் வெளியேற கதறியபடி வந்தான். அவள் இதனை ஊராரிடம் சென்று விபரத்தைக் கூறி அந்த ஊர் மக்கள் அந்த இடத்திற்கு வந்த பார்த்தனர். அங்கே பராசக்தியின் சூலத்தால் வளையல் வியாபாரி குத்தப்பட்டு மாண்டு கிடந்தான்.
உடனே ஊர்மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த தாயே நீ யார் எனக் கேட்க தில்லைக்கு வா என்னை காணலாம் என்று அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. அதை எடுத்து வந்தவர் தில்லை காளி என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும். பின்னர் தீய எண்ணம் கொண்ட வளையல் வியாபாரி சம்ஹாரம் செய்யப் பட்ட இடத்தை காளி அன்னைக்கு கோயில் ஒன்றை அமைக்கச் ஊர் மக்கள் முடிவு செய்தார்கள். அப்படி கட்டப்பட்டதுதான் உப்பூச்சி அம்மன் ஆலயம்.
நம்பிக்கைகள்:
வெள்ளிக்கிழமை பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பகல் 12 மணிக்கு மேல் நடைபெறும் உச்சிகால பூஜையில் கலந்து கொண்ட அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
உடல் நிலை சரியில்லாதவர்கள் அம்மை நோய் கண்டவர்கள் அம்மனுக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து சிவப்பு வளையலும் ஒன்பது கஜ புடவை வைத்து பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் உடல்நிலை சரியாகும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
மனநலப் பிரச்சனை உள்ளவர்களை இவ்வாலயத்திற்கு அழைத்து வந்து மகா மண்டபத்தில் அமர வைத்துவிட்டு அவர்களின் உற்றார் உறவினர் வாசனை திரவியங்களால் அம்மனை அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால் பாதிக்கப்பட்டவர்களின் மனநலம் படிப்படியாக சீராகுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
ஆற்றங்கரையை பார்க்கும்படியாக வடக்கு நோக்கி அமைந்துள்ளது கோயில். மகாமண்டபத்தில் பலிபீடம் அமைந்திருக்க அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன், தரிசனம் தருகின்றனர். கருவறையில் உப்பூச்சி அம்மன் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் ஆறு திருக்கரங்களோடு அசுரனை சம்ஹாரம் செய்வது போல் ஆக்ரோஷத்துடன் காட்சி தருகிறாள்.
எருக்கஞ்செடிகள் அடர்ந்து வளர்ந்த இடம் என்பதால் எருக்கூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். கோயிலை சுற்றியுள்ள செடிகள் அதிக அளவில் வளர்ந்தாலும் இந்த கோவில் வளாகம் இருக்கும் பகுதியில் அன்று முதல் இன்று வரை எருக்கஞ்செடி வளராதது ஆச்சரியம் என்பது ஊர் மக்கள் கூறுகிறார்கள்.
திருவிழாக்கள்:
தமிழ் புத்தாண்டு அன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெறும்.
காலம்
300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எருக்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி