ஊத்துமலை சீலநாயக்கன்பட்டி பால சுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
முகவரி
அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை- சேலம் மாவட்டம் – 636201.
இறைவன்
இறைவன்: பால சுப்பிரமணியர்
அறிமுகம்
சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை சேலம் மாவட்டத்தில் உள்ளது. சீலநாயக்கன்பட்டியில் அமைத்துள்ள ஊத்துமலை முருகன் கோவில் அப்பகுதி மக்களுக்கு திருத்தலமாக அமைத்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் உயரத்தில் இந்த முருகன் கோயில் உள்ளது. இத்தலம் சுமார் 1000–2000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. இங்குத் தைப்பூச விழா, தமிழ் புத்தாண்டு, கார்திகைத் திருவிழா போன்ற விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன. ஊத்துமலை ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர் பொதிகை மலைக்கு வந்ததும், தாமிரபரணியை உருவாக்கினார். அதன்பிறகு பொதிகையின் ஒரு பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்றை ஒட்டியிருந்த, முருகன் கோயிலில் தான் தங்கினார். காலப்போக்கில் அந்தக் கோயிலே அகத்தியர் கோயில் என பெயர் மாறியது. இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் தமிழகமெங்கும் சென்றிருக்க வேண்டும். அவர் சேலம் பகுதிக்கும் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. முருகன் பாலவடிவத்தில் காட்சி தரும் தலமான சேலத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் அவர் விஜயம் செய்துள்ளார். இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சகல சக்திகளையும் உள்ளடக்கியதாக கருதப்படும் ஸ்ரீ சக்கரத்தின் ஒரு பக்கம் ஒரு குடில் உள்ளது. அந்த குடிலில் ரிஷிபத்தினி ஒருவர் தவக்கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் புலித்தோல் மீது அகத்தியர் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ளார். முருகன் கோயிலுக்கு எதிரில் கபிலர் குகை அமைந்துள்ளது. இந்த குகையில் கபிலர் தவக்கோலத்தில் இருப்பது புடைப்புச் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் அருகே மரம், பசு, சூலாயுதம் ஆகியவை உள்ளன. சிவராத்திரி நாட்களில் அதிகாலை வேளையில் அமாவாசை பிறக்கும் சமயத்தில் சப்தரிஷிகளும் அங்குள்ள சுனை, தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. கிளி வடிவில் சுகரிஷியும், கன்வ ரிஷியும் இங்கு தவம் செய்துள்ளனர். இங்குள்ள தல விருட்சம் வில்வம் ஆகும். பால முகம் கொண்டு, வேலும் மயிலும் கொண்டு, அன்பர்க்கு அன்பனாய், பக்தர்களின் வினை தீர்ப்பவனாய் அருள்பாலிக்கும் பால சுப்பிரமணியரையும், ஆதிசக்தியான பாலதிரிபுர சுந்தரியையும் சக்ராதேவியையும் வணங்கினால் வாழ்வில் நலம் பெறலாம்.
நம்பிக்கைகள்
இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்.
சிறப்பு அம்சங்கள்
அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். இந்த கோயிலில் சொர்ண விநாயகர், அகஸ்தீஸ்வரர், சதாசிவர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
திருவிழாக்கள்
பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீலநாயக்கன்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி, கோயம்பத்தூர்