Saturday Nov 16, 2024

ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் அஞ்சல்,வழி கும்பகோணம், வலங்கைமான் வட்டம் – 612 701. தஞ்சாவூர் மாவட்டம். போன் +91 94863 03484

இறைவன்

இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை

அறிமுகம்

ருஞானசம்பந்தர் நாயனரால் பாடப்பெற்றுள்ளது. பாடல்பெற்ற 274 தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 27வது தலமாக அமையப்பெற்றுள்ளது. வசிஷ்டரால் ஏற்பட்ட சாபம் நீங்க காமதேனு இத்தல இறைவனை வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்றதால் இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும் இத்தல இறைவனை தசரதர், வசிஷ்டர் முதலானோர் பூசை செய்து வழிப்பட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக காமதேனு, வசிஷ்டர், தசரதர் பூசை செய்வதுபோல் ஓரேக்கல்லில் வடிவமைக்கப்பட்ட சிற்பமானது காணப்படுகிறது. அம்மன் சன்னதி மண்டபத்தில் பஞ்சபைரவர் சேர்ந்தார்போல் காட்சியளிகின்றனர். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருகளுக்கு சிறப்பு பூசை நடத்தப்பெறுகின்றது. எனவே இக்கோவில் மக்களால் பஞ்ச பைரவர பரிகார தலம் என்று நம்பப்படுகிறது..

புராண முக்கியத்துவம்

பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு “கவர்தீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான “பட்டி’ என்ற பசு உணர்ந்தது. ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக்கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் “பசுபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்பட்டார். வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம்.. (காமதேனு உலகிற்கு வந்த இடம் – கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று) கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயுதேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு மூலவர் பசுபதீசுவரர் சுயம்புலிங்கவடிவில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் பஞ்ச பைரவர் தலம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. தேவாரத்தில் பங்கயமங்கை விரும்பும் ஆவூர், என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். ஆவூர் ஊர்ப்பெயர், பசுபதீச்சரம் கோவிற்பெயர். இத்தலம் மாடக் கோவிலாக விளங்குவது. இவ்வூருக்கு அசுவத்தவனம் என்றும், இறைவன் விளங்கும் விமானம் அழகியமலை உச்சியைக் கொண்டுள்ளதால் மணிகூடம் என்றும் வழங்கப்படுகிறது. திருக்கயிலாய மலையிலிருந்து வாயுதேவனால் கொண்டுவரப்பட்ட இரண்டு மலைத்துண்டுகளில் ஒன்று நல்லூரிலும், ஒன்று இவ்வூரிலும் தங்கியதாகக் கூறப்படுகிறது. பிரமன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர், கந்தருவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற தலம். தர்மத்துவஜன் என்னும் அரசன் பிரமதீர்த்தத்தில் மூழ்கிக் குட்டநோய் நீங்கப் பெற்ற தலம். இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். சங்க காலத்தில் இவ்வூர் மிக்க சிறப்புடையவூராக விளங்கியது. ஆவூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், பெருந்தலைச் சாத்தனார் முதலிய பெரும் புலவர்களைத் தந்த ஊர் இதுவாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது. கல்வெட்டுச் செய்தியில் “”நித்தவிநோத வள நாட்டைச் சேர்ந்த ஆவூர்க்கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார்,” என்று இறைவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாபநாசம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாபநாசம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top