ஆலப்புழா ஹரிப்பாடு மண்ணாறசாலை நாகராஜர் கோயில், கேரளா
முகவரி :
ஹரிப்பாடு மண்ணாறசாலை நாகராஜர் கோயில்,
ஹரிப்பாடு,
ஆலப்புழா மாவட்டம்,
கேரளா மாநிலம் – 690514.
இறைவன்:
நாகராஜர்
அறிமுகம்:
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்கி வருகிறது. கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 47 இல் அமைந்திருக்கும் ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், வடகிழக்கு பாகத்தில், இந்தக் கோவில் நிலை கொண்டுள்ளது. கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும், இக்கோவில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
திருமாலின் அவதாரங்களில் ஒன்று, பரசுராமர் அவதாரம். இவர் தனது தந்தையை கொன்ற சத்திரியர்களின் வம்சங்களையே அழித்தொழித்தார். இதனால் ஏற்பட்ட பாவங்களில் இருந்து விமோசனம் பெற விரும்பிய பரசுராமர், தெய்வீக அம்சம் கொண்ட மகரிஷிகளை அணுகினார். சொந்தமாக ஒரு நிலத்தை பிராமணர்களுக்கு தானம் செய்திட அவர்கள் கட்டளையிட்டனர்.
பரசுராமர் பூமியைப்பெற வருண பகவானை வழிபட்டார். பரம்பொருளான சிவன் அருளிய ‘மழு’ என்ற ஆயுதத்தை சமுத்திரத்திலிருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகியது. அவ்வாறு கிடைத்த பூமியை அந்தணர்களுக்கு தானம் செய்தார். அதுதான் கேரளம் என்று புராணக் கதைகள் சொல்கின்றன.
உப்புச்சுவை காரணமாக வாழ இயலாமல் மரஞ்செடிகள் கூட முளைக்க முடியாமல் இருந்ததால், அந்த இடத்தில் மனிதர்கள் வாழ இயலாது என்று கருதி, மக்கள் அனைவரும் அங்கிருந்து செல்லத் தொடங்கினர். இதனை அறிந்த பரசுராமர் வேதனையடைந்தார். அவர் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். திருமால் அவருக்கு நேரில் காட்சி தந்தார். “நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே எண்ணியவை நடக்கும். அதற்கு ஒரே ஒரு வழி, நாகராஜரை மனதிருப்தி அடையச் செய்து, அவரது அருளைப் பெற வேண்டும்” என்று கூறி மறைந்தார்.
கேரளம் இயற்கையழகு நிறைந்த நாடாகவும், மரஞ்செடி கொடிகள் நிறைந்ததாகவும் அனைத்து சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாறிய பின்னரே அங்கிருந்து விலகுவது என பரசுராமர் தீர்மானித்தார். அதற்கு நாகராஜாவை திருப்திப்படுத்த ஏகாந்தமான ஒரு வனாந்திர பகுதியைத் தேடி தன் சீடர்களோடு புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதியில் கடலோரத்தின் அருகே தகுந்த ஓர் இடத்தை கண்டார். தன் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமான இடமான அங்கே தவம்புரிய ‘தீர்த்த சாலை’ அமைத்தார். திருமாலின் அவதாரமான பரசுராமர் கடுமையான தவம் புரிய நேர்ந்தது. இந்த தவம் காரணமாக அபூர்வமான தரிசனம் கிடைத்தது. நாகராஜாவின் பாத கமலங்களில் தலைகுனிந்து வழிபட்டார். மனம் நெகிழ்ந்து துதித்து நின்றார். பின் கரம் குவித்து மெய்சிலிர்க்க வேண்டுதலை அறிவித்தார். பிற்காலத்தில் தீர்த்த சாலை, ‘மண்ணாற சாலை’ என்று பெயர் மாற்றம் கண்டது.
நாகராஜா, பரசுராமரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். தனக்கு தினம் தினம் பூஜை செய்வதன் மூலம், திருமாலின் அருள் சுரந்து, இந்தப் பகுதியில் தெய்வீகத் தன்மை நிறையும். மனிதர்களின் சொர்க்கபுரியாக இந்த பகுதி மாறும் என்று அருளினார். அதன்படி தனது சீடர்களில் முக்கியமானவரான விப்ரனை என்பவரை, நாக பூஜை செய்யும் அதிகாரியாக பரசுராமா் தேர்ந்தெடுத்தார். அவருடைய வம்சத்தில் பிறப்பவர்களுக்கு நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கினார். இதையடுத்து கேரளம் வனப்புமிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சிதரத் தொடங்கியது. இதனால் இந்தப் பகுதி ‘மந்தரா சோலை’ என்று பெயர் பெற்றது. இதுவே மருவி ‘மண்ணாறசாலை’ என்றானதாகவும் சொல்கிறார்கள்.
தலைமுறைகள் பல கடந்தன. நாகராஜாவின் வாழ்விடத்தை சுற்றியுள்ள வனப்பகுதியில் எதிர்பாராத விதமாக அக்னியின் கோரத்தாண்டவம் ஏற்பட்டது. அந்த பயங்கர காட்டுத் தீயின் கொடுமையால், அந்த வனத்தில் இருந்த நாகங்கள் அனைத்தும் வேதனை அடைந்தன. அவை, நாகராஜாவை சரணடைந்தன. நாகங்களை மண் மூடி பாதுகாத்தது. நாகங்களுக்கு அபயம் கிடைத்த புண்ணிய பூமியாக இந்தப் பகுதி ஆனது.
நம்பிக்கைகள்:
மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தக் கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்பயக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. இதற்காக பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை – வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
சிறப்பு அம்சங்கள்:
நாகதோஷமும்வழிபாடும்: நாக தோஷத்தால், அற்ப ஆயுளும், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், மனநிலை பாதிப்பு, துஷ்ட சக்திகளில் தொல்லை போன்றவை ஏற்படலாம். இதனை தீர்க்க நாக தோஷ வழிபாடு அவசியமாகிறது. இது தவிர செல்வ செழிப்புக்கு- தெய்வீகத் தன்மை நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும். அதே போல் கல்வி மற்றும் சுபீட்சமான வாழ்வுக்கு பட்டு சாத்தியும், தானியம், திவ்ய ஆபரணங்கள் பூட்டியும் வழிபடலாம். உடல் நலம் பெற- உப்பு வைத்து வழிபடலாம். விஷத்தன்மை நீங்க -மஞ்சள். ஆரோக்கிய வாழ்வு பெற – நல்ல மிளகு, கடுகு, சிறு பயறு. சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு – தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள். நீண்ட ஆயுள் பெற – நெய். நினைத்த காரியம் கை கூடுவதற்கு – பால், கதலிப்பழம், நிலவறை பாயசம். குழந்தை பாக்கியம் பெற- மஞ்சள் பொடி. விவசாயம் செழிக்க – பயிர் செய்யும் தானியங்களில் முதன்மையானது என்று தனித்தனியாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும். மகா சிவராத்திரி சிவ ஆலயங்களில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று சிவராத்திரி. இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினத்தை முக்கிய விழாவாக கொண்டாடுகிறார்கள். நாகராஜா பிரதிஷ்டை சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெற்று வருகிறது.
திருவிழாக்கள்:
பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. மற்ற நாகராஜா கோவில்களைப் போல் மண்ணாறசாலையிலும், புரட்டாசி மாதம் ஆயில்யம் தான் பக்திப்பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இந்த வழிபாட்டை திருவிதாங்கூர் மன்னர்கள் ஒரு விரதமாகவே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். ஒரு முறை வழக்கம்போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்த துலாம் (ஐப்பசி) மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளையும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் கோவில் சொத்துக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐப்பசி ஆயில்யம் மாபெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மன்னரும் குடும்பத்தினரும் பங்கேற்கும் அந்தஸ்து கொண்ட விழாவாக ஐப்பசி மாத ஆயில்யம் பிரபலமாகி சிறப்புற்றது. இது தவிர புரட்டாசி மற்றும் மாசி மாதங்களிலும் ஆயில்யம் விழா கோலாகலமாக நடை பெறுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஹரிப்பாடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹரிப்பாடு
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி மற்றும் திருவனந்தபுரம்