Saturday Jan 18, 2025

ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில் திருவாரூர்

முகவரி

அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே) ஆருர் அரநெறி- 610 001 திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 -242 343, +91-94433 54302.

இறைவன்

இறைவன்: அசலேஸ்வரர், அரநெறியப்பர் இறைவி: வண்டார்குழலி

அறிமுகம்

ஆரூர் அகிலேஸ்வரர் கோயில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நமிநந்தியடிகள் வழிபட்டார் எனப்படுகிறது. அசலேசுவரம் என்று வழங்கப்படும் இக்கோயிலின் மூலவர் அசலேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் இயமசண்டர், ஆதிசண்டர் என்று இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன. இங்கு கமலாலயக் குளத்தின் கரையில் சுந்தரருக்கு இறைவனார் தந்த பொன்னை அவர் எடுக்கும் போது அதனை மாற்று உரைத்து சரி பார்த்துச் சொன்ன ’மாற்றுரைத்த விநாயகர்’ சந்நிதி உள்ளது.

புராண முக்கியத்துவம்

நமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார். இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், “”கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே. அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே?’என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,””இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?’என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,””அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று’என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர். சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார். கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் – கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது. மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 151 வது தேவாரத்தலம் ஆகும். கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள். இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரநெறி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top