ஆனாங்கூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி
ஆனாங்கூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆனாங்கூர், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 801.
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: சௌந்தர்யநாயகி
அறிமுகம்
கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவாலங்காட்டில் இறங்கி, அங்கிருந்து தேரழுந்தூர் செல்லும் சாலையில் ஆனாங்கூர் என இறங்க வேண்டும். (கோ.சி.மணி வீடு நிறுத்தம்). இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்பிகை பசுவாகவும், திருமால் மேய்ப்பனாகவும் பூமிக்கு சாபம் பெற்றுவந்த கதையில் இந்த ஆனாங்கூர் ஒரு தலமாக போற்றப்படுகிறது. பெரியதொரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இக்கோயிலில் சுவாமி அம்பாள் ஆலயங்கள் மட்டும் உள்ளன. கோயிலின் கோட்ட மாடங்களில் கணபதி, அகத்தியர், நடராஜர், தென்முகன், திருவிளங்க மூர்த்தி, பிரம்மா, பிட்சாடனர், துர்க்கை, மாதொரு பாகன் ஆகிய திருமேனிகள் பேரழகோடு காணப்பெறுகின்றன. எனினும் இவற்றில் தென்முகன் மட்டுமே பூஜிக்கப்படுகிறார். கருவறையில் சதுரலிங்கத் திருமேனியாக அகத்தீஸ்வரர் காட்சி தருகின்றார். லிங்க பாணம் சிறிதாய் உள்ளது. அம்பிகை சௌந்தர்யநாயகி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். கோயில் அரை ஏக்கர் பரப்பில் உள்ளது. பிரகாரத்தில் தெய்வங்கள் ஏதும் இல்லை, மேற்கில் ஓர் லிங்கமும், வடமேற்கில் ஜேஷ்ட தேவி மட்டும் உள்ளார்கள். சண்டேசர் உள்ளார். பரிவாரத் தெய்வங்களுள் ஒன்றாக ஜேஷ்டா தேவியின் திருவுருவமும் காணப்பெறுகின்றது. இதனால் இக்கோயில் முற்காலச் சோழர் கலை எனக் குறிப்பிடப்பெறும் வகைப்பாட்டுள் அடங்கும் அற்புத கலைச்செல்வங்கள் மிகுந்து காணப்பெறும் ஒரு ஆலயமாகவே திருவகத்தீச்சரம் விளங்குகின்றது. எண்ணற்ற பல சிறப்புக்கள் கொண்டிருந்தாலும், ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது அதுவும் உச்சி கால பூஜையாக உள்ளது. கோயிலுக்கென குருக்கள் இல்லை, திருவாடுதுறையில் இருந்து ஒரு குருக்கள் வந்து செல்கிறார். பிற நேரங்களில் இவ்வூரை சேர்ந்த ருக்மணி எனும் வயதான பெண்மணியே கோயிலை தூய்மை படுத்தும் பணிகள் விளக்கிடுதல் என செய்துவருகிறார்.
புராண முக்கியத்துவம்
தேரழுந்தூர், பில்லூர், ஆனாங்கூர், திருக்குளம்பியம், திருவாவடுதுறை, குற்றாலம், எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, குறுமுளைப்பாலி, திருமணஞ்சேரி என்று இத்தனை ஊர்களைப் பற்றிய தல புராணங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கதையை உருவாக்கியிருப்பதால் அந்தக் கதை நிஜம்தான் என்று ஆகிறது. ஆன் ஆங்கூர் என்பது பசு திரிந்ததற்கு அடையாளமாகப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது (ஆன்-பசு). முதல் பராந்தக சோழனின் மகனான கண்டராதித்தர் (கி.பி.950-957) சோழப் பேரரசராகத் திகழ்ந்தவர். இவர்தம் தேவியாரே சோழப்பேரரசி செம்பியன் மாதேவியாவார். இவர் சோழர் கால கோயில் கட்டிடக் கலை வளர ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர். இவர் எடுத்த ஆலயங்களில் ஆனாங்கூர் அகத்தீஸ்வரம் ஆலயமும் ஒன்று. ஆனாங்கூர் அகத்தீச்சரத்தில் எண்ணற்ற கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோயிலின் கருங்கல் சற்று தரம் குறைந்த வெண் கருங்கல் என்பதால் பெரும்பாலான கல்வெட்டுகள் படிக்க இயலாதவையாக போயின, தற்போது ஆறு கல்வெட்டுச் சாசனங்கள் சிதைவின்றி முழுமையாகக் காணப்பட்டாலும், சில சாசனங்கள் இங்கு இடம் பெற்றிருந்து பிற்காலத்தில் அழிந்து துண்டு கல்வெட்டுகளாக அம்மன் ஆலய சுவரில் காணப்பெறுகின்றன. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆனாங்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி