ஆதிசங்கரர் குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்
அன்று ஏகாதசி. ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக பறந்து சென்று கொண்டிருந்தார். மஹாபுருஷர் என்பதால் அவருக்கு பல சித்திகள் உண்டு. அதிலொன்று பறந்து செல்வது. அப்படி அவர் பறந்து செல்லும் வழியில் ஓரிடத்தை கடக்கும்போது எங்கிருந்தோ நாராயண நாமம் ஒலிப்பது காதில்விழ, அவர் கீழ் நோக்கி எங்கிருந்து அந்த ஒலி வருகிறதென்று பார்த்தார். அந்த நாராயண கோஷம் ஒலித்துக் கொண்டிருந்த இடம் குருவாயூர் க்ஷேத்திரத்தில்.
பிறகு அத்வைதியான ஆதிசங்கரர் குருவாயூர் கோவிலைக் கடந்து பறந்து செல்ல முயன்றார். திடீரென அவரை யாரோ கீழ்நோக்கி இழுப்பதை உணர்ந்த நொடியில் அவர் குருவாயூர் கோவிலுக்குள் விழுந்திருந்தார். அவருக்கு முன்பாக கஜராஜன் மீதமர்ந்து சீவேலி வலம் வந்துகொண்டிருந்த குருவாயூரப்பனைக் கண்டதும், தன்னைக் கீழே இழுத்தது அவன்தான் என உணர்ந்தார் ஆதிசங்கரர்.
அத்வைதிக்கு பக்தியும் வேண்டுமெனப் புரிந்தது அவருக்கு. அதை உணரவைக்கத்தான் இந்த லீலை என்பதும் புரிய, என்னை மன்னித்தருள் கிருஷ்ணா என்று குருவாயூரப்பனிடம் மனமுருக மன்னிப்பு கோரினார்.
பின்னர் குருவாயூரிலிருந்து செல்வதற்கு மனமின்றி அங்கேயே ஒரு மண்டலம் தங்கி நித்தமும் கோவிலில் நடத்தப்பட வேண்டிய வழிபாட்டு முறைகளையெல்லாம் உருவாக்கிக் கொடுத்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்பினார்.
அவர் ஏற்படுத்திக்கொடுத்த வழிபாட்டு முறைகள்தான் இன்றளவும் குருவாயூர் கோவிலில் பின்பற்றப்படுகிறது.
குருவாயூரப்பன் அவரைக் கீழே இழுத்து விழச்செய்த இடம் கோவிலின் வடமேற்கு திருச்சுற்றில். மேற்கிலிருந்து வடக்கில் திரும்பும் திருச்சுற்றில் கருவறை பக்கமாக உள்ள ஒரு தூணில் சிலாரூபமாக ஆதிசங்கரர் நின்றிருப்பதையும் காணலாம்.
நித்தமும் அங்கே சீவேலி வலம் வரும்போதெல்லாம் ஆதிசங்கரர் இருக்கும் தூணுக்கருகே குருவாயூரப்பனைச் சுமந்திருக்கும் கஜராஜன் சிலநிமிடங்கள் நிறுத்தப்பட்டு அங்கு வழிபாடுகள் நடக்கும். ஆதிசங்கரர் அப்போது குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்.
ஆதிசங்கரர் விழுந்த அந்த இடத்தின் மேல் விதானத்தில் இன்னமும் ஒரு துவாரம் மூடப்படாமல் அப்படியே விட்டுவைக்கப்பட்டிருக்கிறது
கீழே உள்ள படம் மேலேயுள்ள சம்பவத்தை கூறும் அற்புதமான புகைப்படம். ஆதிசங்கரர் அந்தரத்தில் நின்றவாறு குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கோருவது போலவே தோன்றுகிறதல்லவா?
புரட்டாசி சனிக்கிழமையான இன்று என்னை இதை எழுத வைத்தவனும் அவனே.
Vidya Subramaniam அவர்களின் பதிவு.