Thursday Dec 26, 2024

ஆதலையூர் பீமேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்,

ஆதலையூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609701.

போன்: +91 98654 02603, 95852 55403.

இறைவன்:

பீமேஸ்வரர்

இறைவி:

ஆனந்தவல்லி

அறிமுகம்:

 நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில், இந்த இரண்டு ஊர்களுக்கும் மத்தியில் சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதலையூர். நன்னிலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊரின் மத்தியில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் திருக்கோயில். ஆதலையூர் அல்லது ஆலமரத்தடி என்று நிறுத்தத்தில் இறங்கி சென்றால் இக்கோயிலை அடையலாம். ஆறுகால பூஜைகள் நடந்த இக்கோயிலின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது. ஒரு கால பூஜைக்கூட நடக்காமல் மிகவும் சிதலமுற்று இருந்த இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் தொடங்கியுள்ளது.

புராண முக்கியத்துவம் :

சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிவன், தன்னை உருமாற்றி விளையாடும் திருவிளையாடலை துவக்கினார். முதலில் வில்வமரமாகவும், அடுத்து கங்கையாகவும் மாறிய பெருமானை பார்வதி கண்டுபிடித்தாள். விளையாடியபடியே அவர்கள் பூலோகம் வந்தனர். அங்கே பசுவாக மாறி நின்ற சிவனை காணாமல் பார்வதி தேடியலைந்தாள். அந்த முரட்டுப்பசு யாருக்கும் அடங்காமல் ஓரிடத்தைச் சுற்றிவந்தது. அந்தணர்களுக்கு சொந்தமான வயல்களை துவம்சம் செய்தது, ஒருவழியாக அதைப் பிடித்தனர். இப்படி ஒரு பசுவை ஊரில் எவரும் பார்த்ததே இல்லையே, யாருடையதாக இருக்கும் என்று அந்தணர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாட்டுக்குச் சொந்தக்காரன் வந்து மாட்டை ஓட்டிக் கொண்டு போகட்டும் என்று ஊர் மத்தியிலேயே கட்டி வைத்தனர். சிவனைத்தேடி அலைந்த பார்வதிதேவி, கட்டிப் போடப்பட்டிருந்த பசுவைக் கண்டு மனம் இரங்கினாள். மாட்டை அவிழ்த்துவிட்டாள். உடனே மின்னலென மறைந்தது அந்தப்பசு. பசுவாக வந்தது சிவனே என்று அறிந்து ஆனந்தம் அடைந்தாள். ஆனந்தநாயகி என்ற பெயர் பெற்றாள். தாங்கள் வந்த இடத்திலேயே தங்க சிவபார்வதி முடிவெடுத்தனர். ஆ என்றால் பசு, தளை என்றால் கட்டுதல். மாட்டைக் கட்டிப் போட்டதால் இந்த ஊருக்கு ஆதளையூர் எனப்பெயர் வந்தது. அதுவே மருவி ஆதலையூர் ஆனது.

குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் இழந்த தேசத்தையும், பதவியையும் மீண்டும் பெற வேண்டி பஞ்ச பாண்டவர்கள் சேர்ந்தும், தனித்தனியாகவும் பல தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அவர்களில் ஒருவனான பீமன். இத்தலத்திற்கு வந்து, தாமரைக்குளத்தில் நீராடி சிவனை வணங்கி வெற்றி பெற வலிமை தர வேண்டினான். சிவபெருமான் பீமனுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். பிறகு தான் குருஷேத்திரப் போரில் வெற்றி பெற்று, இழந்த தேசத்தையும், பதவியையும் மீட்டார்கள். பீமன் வழிபட்டதால் இவ்வூர் ஈசன், பீமேஸ்வரர் எனப்பட்டார்.

நம்பிக்கைகள்:

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற, இழந்த பதவியையும், சொத்துக்களையும் இழந்தவர்கள் பீமேஸ்வர சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்:

இங்குள்ள இறைவன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் சிறப்பு. எட்டுக்குடி முருகனுக்கு காவடிகள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன. நாச்சியார்கோவிலைப் போல, இங்கு பெருமாள் சன்னதியில் கல்கருட பகவான் உள்ளார்.  பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், பூமிதேவி நீளாதேவி சமேத வரதராஜப்பெருமாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவரை தரிசிக்கலாம். அர்த்தமண்டபத்தில் அழகு பிள்ளையார் அருள்பாலிக்கிறார். ஆனால் இவர்களுக்கு சன்னதிகள் இல்லை.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆதலையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நன்னிலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top