Thursday Dec 26, 2024

அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91-44-2766 0378, 97894 19330

இறைவன்

இறைவன்: வீரராகவப்பெருமாள் இறைவி: கனகவல்லித் தாயார்

அறிமுகம்

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப்பெருமாளாக இக்கோவிலில் குடிகொண்டுள்ளார். இக்கோயிலின் இறைவன் ”வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். 1 வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார்.பிறகு படுத்துறங்க அந்த கிழவர் “”எவ்வுள்’ என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி “இவ்விடம் படுத்துக் கொள்ளவும்’ என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் “”வரம் கேள்’ என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

வைத்திய வீரராகவர் – பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

பிரம்மோற்சவம் – தைமாதம் – 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். பிரம்மோற்சவம் – சித்திரைமாதம் – 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். பவித்ர உற்சவம் – 7 நாட்கள் திருவிழா – இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

ஸ்ரீ அகோபில மடத்தின் அதிகாரத்திற்குட்பட்டது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவள்ளூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவள்ளூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top