Saturday Jan 18, 2025

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம்-631 501 காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 98653 – 55572, +91- 99945 – 85006.

இறைவன்

இறைவன்: திருமேற்றளீஸ்வரர் , மற்றோர் மூலவர்: ஓதவுருகீஸ்வரர் இறைவி: திருமேற்றளி நாயகி

அறிமுகம்

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் சிவன் அருளுகிறார்.இத்தலத்தின் தலவிநாயகர் சி த்திவிநாயகர். கோயிலின் ராஜகோபுரம் 3 நிலை உடையது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு காமாட்சியே பிரதான அம்பாளாக கருதப்படுவதால் இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் அம்பாள் இருப்பதில்லை. ஆனால், இங்கு பராசக்தி அம்பாள் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அருள்புரிகிறாள். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர், “ஓதஉருகீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

புராண முக்கியத்துவம்

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு, சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. எனவே, சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனோ, இது சாத்தியப்படாது என சொல்லி ஒதுங்கிக் கொண்டார். விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்ய தொடங்கினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன், அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார். அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி, தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு, தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவதல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர், இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு, அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு, லிங்க வடிவம் பெற்றபோது, சம்பந்தர் பாடலை முடித்தார். எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர், “ஓதஉருகீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.

நம்பிக்கைகள்

தன்னை மனமுருகி வழிபட்ட விஷ்ணுவுக்கு தன் வடிவத்தையே கொடுத்தவர் என்பதால் திருமேற்றளீஸ்வரரை வணங்கிட வேண்டும் வரங்கள் கிடைத்திடும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் சிவன் அருளுகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 234 வது தேவாரத்தலம் ஆகும். காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு காமாட்சியே பிரதான அம்பாளாக கருதப்படுவதால் இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் அம்பாள் இருப்பதில்லை. ஆனால், இங்கு பராசக்தி அம்பாள் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அருள்புரிகிறாள். இவள் சாந்தமான கோலத்தில் இருப்பது சிறப்பு. சிவன் மேற்கு நோக்கி இருப்பதால் இவருக்கு “மேற்றளீஸ்வரர்’ (மேற்கு பார்த்த தளி) என்ற பெயர் வந்தது. தளி என்றால் “கோயில்’ என்றும் பொருள் உண்டு. ஓதவுருகீஸ்வரர் கருவறையில் சிவ வடிவான லிங்கத்தையும், அருகே திருமாலின் பாதத்தையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதால் வாழ்க்கையில் குறைவிலாத வளம்பெறலாம் என்பது நம்பிக்கை. திருநாவுக்கரசர் இத்தலத்தை, “”கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்” என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். இதனால், இத்தலத்து சுவாமியை வணங்கினால் கல்வியில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. திருமேற்றளீஸ்வரரே இங்கு பிரதானம். ஆனாலும், கோயிலின் ராஜகோபுரமும், பிரதான வாசலும் ஓத உருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன் அவருக்கு இடது பக்கமாக திரும்பியிருப்பது வித்தியாசமான கோலம் ஆகும். நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேரும், புதனும் வழிபட்ட தலம் இது. தெருக்கோடியில் நின்று பாடிய திருஞானசம்பந்தர், அவ்விடத்திலேயே தனிச்சன்னதியில் இருக்கிறார். சாதாரணமாக கையில் தாளத்துடன் காட்சி தரும் சம்பந்தர் இங்கு வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இவருக்கு ஆளுடைப்பிள்ளையார், சம்பந்த பிள்ளையார் என்ற பெயர்களும் உள்ளதால் இவரது பெயராலேயே இப்பகுதி “பிள்ளையார் பாளையம்’ என்றழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு “பச்சிமாலயம்’ என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருஞானசம்பந்தர் குருபூஜை, ஞானப்பால் கொடுத்த உற்ஸவம்.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top