அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கங்களாஞ்சேரி
முகவரி
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கங்களாஞ்சேரி, நாகக்குடி, திருவாரூர் மாவட்டம்.
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி
அறிமுகம்
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து மேற்கே சுமார் 1 கி.மீ. நடந்து சென்றால், நாகக்குடி அகத்தீஸ்வரர் கோயிலை அடையலாம். அகத்தியர் வழிபட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில், இன்றைக்கு மதில் சுவர்கள் பெருமளவு இடிந்தும், ராஜகோபுரம், சந்நிதிகளின் விமானங்கள் சிதைந்து செடிகொடிகள் மண்டியும் இருக்கிறது. இந்த அகத்தீஸ்வரர் கோயில் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்திருக்கவேண்டும் என்பது ஆலயத்தின் தோற்றத்தைப் பார்க்கும்போதே தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆலயத்தின் மதில்சுவர் சுமார் இரண்டடி அகலத்தில் உள்ளது. ராஜகோபுரம் முதல் அனைத்து சந்நிதிகள் மற்றும் மதில்சுவர் என முழுவதும் செங்கல் பிளாக்குகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
செங்கல்லால் ஆன பிளாக்குகளைக் கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்கும்போது, சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. வழக்கமான முறையில் செங்கற்களைத் தயாரித்து, அவற்றைத் தேவையான அளவுக்கு உடைத்துப் பயன்படுத்தாமல், எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்திலேயே பிளாக்குகளாகச் செய்து, இந்தக் கோயில் கட்டப் பயன்படுத்தி இருக்கின்றனர். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த அளவுக்குச் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பல கலைஞர்கள் தங்களின் அயராத உழைப்பால், நாம் நாளும் நலம் வாழ எழுப்பிய கோயில் இன்று பெருமளவு சிதிலமடைந்து காணப்படுகிறது. முற்காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தப் பகுதி, நாகர்களின் ஆளுகையில் இருந்தது. எனவே, இந்த ஊருக்கு நாகக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. அகத்தியர் தென் திசைக்கு வந்தபோது, இந்த இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், இங்குள்ள இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தக் கோயில் இறைவனை மகாலக்ஷ்மி வழிபட்டு வரம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இந்தக் கோயிலில் மகாலக்ஷ்மிக்கு தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது’’ஆனால் இப்பொழுது அச்சந்நிதி சிதிலமைடந்து காணப்படுகிறது. இந்தப் பகுதியில் முற்காலத்தில் நிறைய நாகங்கள் இருந்ததாகவும், இரவு வேளைகளில் அவை திரண்டு வந்து இங்குள்ள இறைவனை பூஜித்ததாகவும் சொல்கிறார்கள். ஒருகாலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு வந்ததாக தெரிகிறது. காலப்போக்கில் பக்தர்கள் வருவது நின்றுவிட்டது. கோயிலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலம் அடைந்துவிட்டது. தற்போது தெய்வ விக்கிரஹங்களை ஒரு சிறிய கட்டடத்தில் வைத்துப் பூஜை செய்து வருகிறார்கள்.
நம்பிக்கைகள்
பிரதோஷ காலத்தில் இங்கு வந்து அகத்தீஸ்வரரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும்; விஷ ஜந்துக்களால் பாதிப்புகள் ஏற்படாது. எல்லாவற்றுக்கும் மேலாக, சிவஞானம் ஸித்திக்கும். அதேபோல், அம்பாள் ஆனந்தவல்லி சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், தடைப்பட்டு வரும் திருமணம் நல்லபடி கூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
வழக்கமான முறையில் செங்கற்களைத் தயாரித்து, அவற்றைத் தேவையான அளவுக்கு உடைத்துப் பயன்படுத்தாமல், எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்திலேயே பிளாக்குகளாகச் செய்து, இந்தக் கோயில் கட்டப் பயன்படுத்தி இருக்கின்றனர். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த அளவுக்குச் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
காலம்
2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கங்களாஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி