Wednesday Oct 30, 2024

அம்பாசமுத்திரம் மயிலேறி முருகன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அம்பாசமுத்திரம் மயிலேறி முருகன் திருக்கோயில்,

என்.ஜி.ஓ காலனி, அம்பாசமுத்திரம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627401.

இறைவன்:

மயிலேறி முருகன்

இறைவி:

வள்ளி, தெய்வானை

அறிமுகம்:

 குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பதற்கேற்ப குமரன் குடிகொண்ட தலங்களுள் ஒன்றாகத் திகழும் இந்த கோயில் இருக்குமிடம் அம்பாசமுத்திரம். மலைக் கோவில் அடிவாரத்தில் சின்ன பிள்ளையார் கோயில் உள்ளது. அவரை தரிசித்து விட்டு மலையில் சுமார் 500 படிகள் ஏறிச் செல்லும் வழியில் இடும்பன் சன்னதி அகஸ்த்திய சன்னதியை கடந்து மேலே உள்ள கோயிலை அடையலாம். கருவறையில் வள்ளி தெய்வானையுடன் கல்யாண கோலத்தில் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். அருகே உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. முன்னதாக மயில் வாகனம் இருக்கிறது.

மயில் அடையாளம் காட்டிய இடத்தில் கட்டப்பட்ட கோயிலில் அருளுவதால் மயிலேறி முருகன் என்று அழைக்கப்படும் இத்தலத்து முருகனை அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் டீச்சர்ஸ் காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் என்.ஜி.ஓ காலனியில் உள்ள மலையில் மயிலேறி முருகன் கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

 தூத்துக்குடியில் துறைமுகம் அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தேவையான பாறைகளை அருகில் உள்ள மலைக் குன்றிலிருந்து வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அயர்ச்சியும் சோர்வும் போக்குவதற்காக அவர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான வேலனை வேண்டிக் கொண்டார்கள். அது அவர்களுக்கு  இதமாகவும் துணையாகவும் இருக்கவே பாறை ஒன்றில் வேல், மயில், ஓம் என்ற எழுத்து ஆகியவற்றை புடைப்பு சிற்பமாக செதுக்கி வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பணிகள் நிறைவு பெற தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

காலப்போக்கில் மலையடிவாரத்தில் மக்கள் வீடு கட்டி குடியேற தொடங்கினர். மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலையில் அதுவரை மறைந்திருந்தது போதுமென மயில்வாகனன் நினைத்தானோ என்னவோ அனுதினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மயில் எங்கிருந்தோ பறந்து வந்து தொழிலாளர்கள் புடைப்புச் சிற்பமாய் முருகனை வணங்கிய பாறையில் நின்று தோகை விரித்து நடனமாடி சென்றது. தினம் தினம் இது நடக்கவே என்ன காரணமாக இருக்கும் என யோசித்த மக்கள், ஒருநாள் மலை மீது ஏறி சென்ற பார்த்தனர். அங்கு பாறையில் புடைப்புச் சிற்பத்தை கண்டு மெய்சிலிர்த்த இவர்கள் இவ்விடத்தில் முருகன் கோயில் அமைத்து வழிபட எண்ணினர். ஆனால் இங்கு அமைவது முருகனுக்கு அது விருப்பம் உண்டா என அறிய சிறுவன் ஒருவனிடம் மேல் ஒன்றினை கொடுத்து உனக்கு விருப்பமான இடத்தில் இடையூறு என்றார்கள் அச்சிறுவன் ஒத்தையடி பாதையில் மலையேறி ஊர்மக்கள் முருகன் கோயில் அமையவிரும்பிய இடத்திலேயே அந்த வேலை ஊன்றினான். மகிழ்ச்சி அடைந்த ஊர்மக்கள் அந்த இடத்திலேயே முருகன் கோயிலை அமைத்துள்ளனர்.

நம்பிக்கைகள்:

மயில் வாகனனை தரிசித்தால் மணப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக 13 செவ்வாய்க் கிழமைகளில் இவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி எலுமிச்சை பழம் சமர்ப்பித்து விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் மணப்பேறு கிட்டும். மேலும் வேலை வாய்ப்பு அமைதல், கடன் தொல்லை நீங்குதல் போன்ற நற்பலன்களும் கிட்டுவதாக சொல்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

 கோயிலின் தெற்கு நோக்கியவாறு தொழிலாளர்கள் அமைத்த பாறை சிற்பம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் உள்ள பாறை இயற்கையாக நந்தி அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறது. அதனருகில் காசியிலிருந்து கொண்டுவந்த பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். மலையிலிருந்து கீழிறங்கி வர தனி படிகள் உள்ளன.

திருவிழாக்கள்:

பௌர்ணமி அன்று இரவு அகஸ்திய முனிவருக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. அன்றைய தினம் கூட்டு வழிபாடு உண்டு. மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை, வருட விசேஷமாக வைகாசி விசாகத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 10 நாள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி தெய்வானை சமேத முருகன் திருக்கல்யாணமும் சிறப்புற நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் திருவண்ணாமலை போலவே இங்கு உள்ள பாறையில் பெரிய விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. அன்று மாலை உற்சவம் வீதிஉலா உண்டு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

டீச்சர்ஸ் காலனி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top