அடியக்கமங்கலம் அசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
அடியக்கமங்கலம் அசுபதீஸ்வரர் திருக்கோயில்,
அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611101.
இறைவன்:
அசுவதீஸ்வரர் என்பது மாறி பசுபதீஸ்வரர்
இறைவி:
மங்களாம்பிகை
அறிமுகம்:
அடியக்கமங்கலம்; முதலாம் இராசராசசோழனது ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துக்கு உட்பட்ட கிராமமாக இருந்திருக்கறது. இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடியப்பிமங்கலம் என்றும், அடியப்பியச் சதுர்வேதி மங்கலம் என்றும் வழங்கியிருக்கிறது. செம்பியன் மாதேவியார் திருவாரூரில், தான் கற்றளியாக்கிய கோயிலுக்கு 234 காசுகளை வழங்கிய போது, அதனை ஏற்று இவ்வறக் கட்டளையைச் செயல்படுத்தும் பொறுப்பினை அடியப்பியச் சதுர்வேதிமங்கலத்து சபையார் திறம்படச் செயல்படுத்தியிருக்கின்றனர்.
இவ்வூர் திருவாரூர்- கீவளூர் சாலையில் ஆறு கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு மூன்று சிவன் கோயில்கள் உள்ளன. மூன்று கோயில்களில் இரு கோயில்களுக்கு காசி விஸ்வநாதர் எனவும் ஒரு கோயில் அசுபதீஸ்வரர் எனவும் வழங்கப்பட்டு வருகிறது. இறைவனை அசுவம் வழிபட்டதால் இறைவனுக்கு அசுபதீஸ்வரர் என பெயர். இதனால் அசுவமங்கலம் ஆகி அடியக்க மங்கலம் ஆகியிருக்கலாம்.
பிரதான சாலையில் இருந்து தெற்கில் உள்ள ரயிலடிக்கு செல்லும் சாலையில் சென்று, முதல் வலதுபுறம் திரும்பும் தெருவில் சென்றால் இக்கோயில் உள்ளது. ஊர் முழுதும் பிறமதத்தவர் வந்துவிட்டதால் இக்கோயில் இருக்கும் சிறு தெருவில் மட்டும் இந்துகள் உள்ளனர். பழம்பெருமை மிக்க கோயில் தற்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். கிழக்கு நோக்கிய சிறிய கோயில் இறைவன் அசுவதீஸ்வரர் என்பது மாறி பசுபதீஸ்வரர் என ஆகி உள்ளது, அதனை முகப்பில் எழுதியுள்ளனர்.
சிறிய கருவறை கொண்ட இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார், இரு புறங்களிலும் விநாயகர் முருகன் உள்ளனர், சிறிய நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை சுவற்றில் உள்ள மாடத்தில் தென்முகன் உள்ளார். சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார். இறைவி மங்களாம்பிகை தனி கோயில் கொண்டு தெற்கு நோக்கியுள்ளார் அருகில் ஒரு மேடையில் பைரவர் சூரியன் சம்மந்தர் உள்ளனர். சம்மந்தரின் இருப்பு பழம் கோயிலின் பெருமை சொல்வதாக அமைந்துள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அடியக்கமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி