Tuesday Sep 17, 2024

வெங்கிடங்கால் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

வெங்கிடங்கால் சிவன்கோயில், வெங்கிடங்கால், கீழ்வேளூர் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

ஒரு காலத்தில் பச்சைப் பசேல் என்றிருந்த வயல்வெளிகளுக்குப் பதிலாக கருவேலங்கன்றுகளும், வெற்றுக் குழிகளும்தான் இப்போது காணக் கிடைக்கின்றன. பல ஆண்டுகளாக விவசாய மின்றி தரிசாக விடப்பட்ட நிலங்கள், கருவைககாடுகளளாகி விட்டன. இப்படிசாகுபடி நிலங்கள் பாழானதால் மண்ணை நேசித்த மக்கள் தாய் மண்ணை விட்டு புகலிடம் தேடி சென்றுவிடுகின்றனர். விளைவு வழிபட்ட கோயில்கள் பாழ் பட்டு போகின்றன. அப்படி பாழாகிய ஒரு ஊர்தான் வெங்கிடங்கால். திருவாரூர்-கங்களாஞ்சேரி – நாகூர் சாலையில் கங்களாஞ்சேரி யில் இருந்து 15வது கிமீ-ல் உள்ளது இந்த வெங்கிடங்கால். 16ம் நூற்றாண்டில் அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் விஜயநகரப் பேரரசை ஆண்டு வந்தவர் வேங்கடபதிராயர் என்பவர் ஆவார். இவரது நலன் வேண்டி கொடுக்கப்பட்ட தான ஊராக இவ்வூர் இருக்கலாம். வேங்கடபதி ராயர் மங்கலம் என இருந்து பின்னர் வெங்கிடங்கால் ஆனது எனலாம். இவ்வூரில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் ஒன்றும் அதன் அருகில் ஒரு வைணவ கோயில் ஒன்றும் உள்ளது. இரண்டுமே கவனிப்பாரின்றி பாழ்பட்டு கிடக்கிறது.

புராண முக்கியத்துவம்

சிவன்கோயில் எதிரில் ஒரு பெரிய குளமும், வைணவ கோயில் பின்புறம் ஒரு குளமும் உள்ளது. இறைவன் சுந்தரேஸ்வரர் என சில பதிவேடுகளில் உள்ளது, கோயிலுள் வீழ்ந்து கிடக்கும் போர்டு இறைவன் நாகநாதர் என சொல்கிறது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். கம்பீரமான நாயக்கர் பாணி கட்டுமானம். உயர்ந்த கூம்பு விதானம், கொண்டு அருமையான கட்டிடகலை சிறப்பு கொண்டுள்ளது ஆனால் ஆலமரங்களுக்கும் அரசமரங்களுக்கும் அது தெரியுமா என்ன? தனது வேர்களை மேலிருந்து கீழ் வரை இறக்கி விரிசல்களை உண்டாக்கியுள்ளன. விமானம், அதன் பக்க சுவர்,மண்டப மேற்கூரை என எங்கும் சிதைவுகள், விரிசல்கள். வடக்கில் உள்ள சண்டேசர்கோயிலும் கிணறும் கூட சிதைவுக்கு தப்பவில்லை. முகப்பு மண்டபத்தின் வெளியில் தனித்த ஒரு சிறு மண்டபத்தில் நந்தியெம்பெருமான் உள்ளது. முகப்பில் உள்ள கதவுகள் கழன்று கிடக்கின்றன. உள்ளே முற்றிலும் இருட்டான நிலையில் மண்டபம் உள்ளது, காலடியில் என்ன உள்ளது என அறியக்கூட முடியவில்லை, இறைவன் பெயர் வேறு நாகநாதர் என போர்டில் உள்ளதே என எண்ணியவாறு உள்ளே சென்றேன். காரிருள் என்பதன் பொருளை இறைவன் இறைவி கருவறைகளை கண்டபின்பே உணர்ந்தேன். கருவறை மூர்த்திகளை நான் படமெடுப்பதில்லை என்றாலும் இன்றைய நிலையை நீங்கள் காணவே இதனை எடுத்து வந்துள்ளேன். இறைவன் அழகிய வட்ட வடிவ ஆவுடையார் கொண்டு உயர்ந்த பாணன் கொண்டு விளங்குகிறார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் உள்ளார். தெற்கு நோக்கிய இறைவி சன்னதி என்பதால் கூடுதல் இருட்டு,கைபேசியின் வெளிச்சம் கூட அவர்மேல் எட்டவில்லை. மண்டபத்தின் ஒரு புறம் உள்ள மேடை ஒன்றில் சூரியன் மட்டும் உள்ளார். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

16 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வெங்கிடங்கால்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top