Tuesday Jun 25, 2024

ரெட்டாகுறிச்சி கைத்தலநாதர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

ரெட்டாகுறிச்சி கைத்தலநாதர் சிவன்கோயில், ரெட்டாகுறிச்சி, வேப்பூர் வட்டம், கடலூர் மாவட்டம் – 606304.

இறைவன்

இறைவன்: கைத்தலநாதர் இறைவி: அனுகூலாம்பிகை

அறிமுகம்

கடலூர் மாவட்ட மேற்கு எல்லைபகுதியான வேப்பூர் குறுக்கு சாலையை தாண்டி சரியாக 11வது கிலோமீட்டரில் ரெட்டாகுறிச்சி பேருந்து நிறுத்தம் உள்ளது. வலதுபுறம் ஒரு பாரத் பெட்ரோலியம் எரிபொருள் நிரப்பு மையத்தை ஒட்டி வடக்கு நோக்கி செல்லும் சாலை நம்மை ரெட்டாகுறிச்சிக்கு அழைத்து செல்லும். பெரிய ஏரியின் கரையோர கிராமம், ஏரிப்பாசனத்தால் அன்றும் இன்றும் இவ்வூர் மிக பசுமையாக செழிப்புடனும் இருக்கிறது. இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இப்பகுதியில் குறிச்சி என பல கிராமங்கள் உள்ளதால், இரட்டைப்புலவர்களால் பாடல் பெற்ற இதனை இரட்டை குறிச்சி என அழைக்கப்பட்டு பின் ரெட்டாக்குறிச்சி என மாறியதாக கருதலாம். பல சிறப்புக்கள் கொண்ட கோயில் தற்போது வரை ஒதுக்கப்பட்ட ஒரு கோயிலாக ஊரில் இருந்து சற்று தள்ளி வடகிழக்கு பகுதியில் உள்ளது. மதில் சுவர், கோயில் கோபுரம் கருவறை, முகப்பு மண்டபம், மடைப்பள்ளி என சிதைவடையாத பகுதியே இல்லை என்று சொல்லலாம். முற்றிலும் செங்கல் சுண்ணம் கொண்டு கட்டப்பட்ட தளி என்பதால் சிதைவுகளுக்கு பஞ்சமில்லை.

புராண முக்கியத்துவம்

சில நூற்றாண்டுகளின் முன்னம் பசு வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்தது, இதனால் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கினர் பாலை உள்ளுரிலும்,வெளியூரிலும் விற்று வந்தனர். இம்மக்கள் தங்கள் ஊரில் பழுதடைந்த சிவாலயத்தினை திருப்பணிகள் செய்துவந்தனர். . பணிகள் முடிந்துவிட்ட நிலை, அப்போது, ஒருவர் மாட்டுவண்டியில் பால் நிரப்பப்பட்ட பானைகளை வைத்துக்கொண்டு விற்பனை செய்ய வெளியூருக்கு கொண்டு செல்லுகையில் ஓரிடத்தில் ஒரு கல்லின் மீது ஏறிய வண்டி திடீரென கவிழ்ந்து பானையில் உள்ள பாலானது அந்த கல்லின் மீது கொட்டிவிடுகிறது. ஒரு நாள் கவிழலாம், ஆனால் தினந்தோறும் இந்நிகழ்வு நடைபெறுவதை கண்டு கோபம் கொண்ட பால்காரன் ஒரு மண் வெட்டியைக் கொண்டு அந்த இடத்தை தோண்டும் போது கல்லில் மண்வெட்டி படவே அந்த கல்லில் இரத்தம் வழிந்தது .அதை கண்டு பீதியடைந்த அவன் ஊரை கூட்ட, எல்லோரும் சேர்ந்து தோண்டி பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கம் இருந்ததை கண்டனர். ஊர் மக்கள் அந்த சிவலிங்கத்தை புதிதாய் கட்டப்பட்ட ஆலயத்தின் கருவறையில் வைக்க முடிவு செய்தனர். ஆனால் கருவறையின் நுழைவாயில் சிறிதாக இருந்ததால் கருவறையின் நுழைவாயிலின் முன்னே வைத்து வணங்கினார்கள் இதனால் இங்கு இறைவன் கருவறையில் இல்லாமல் இடைநாழி பகுதியில் உள்ளார். இறைவன் கைத்தலநாதர் இறைவி அனுகூலாம்பிகை இறைவனுக்கு கைத்தலநாதர், கைத்தலநாதேஸ்வரர், வானகாத்தவநாதர் வானகாத்தவநாதேஸ்வரர் என பெயர்களும் கல்வெட்டில் வழங்கப்படுகிறது. கோயிலின் காலம் என்றால் அது ஆயிரம் வருடங்களை கடந்தது. பொது ஆண்டு 921 ன் பராந்தகன் கல்வெட்டு கிடைத்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் பிற்கால திருப்பணி மூன்று நிலை ராஜகோபுரம் இறைவன் சன்னதிக்கு நேராக கிழக்கு பார்த்து அமைந்துள்ளது அதனை கடந்தவுடன் வலதுபுறம் அம்மன் சன்னதி உள்ளது அதற்க்கு முன் பதினாறு உயர்ந்த தூண்கள் கொண்ட மகாமண்டபம் அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ளது. அதில் இக்கோயிலை கட்டுவித்த மன்னர்களது சிலைகள் தூணில் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் பிற்காலத்தது ஆகலாம், அதாவது நாயக்கர் காலம். சில பெயர்கள் அந்த மன்னர்கள் சிற்பத்தின் மேல் காணப்படுகின்றன. பெரிய வெட்டவெளி அடுத்து இறைவன் கருவறை தனித்து உள்ளது இறைவன் கருவறை முன்னம் ஒரு பெரிய கூம்பு வடிவ மண்டபம் உள்ளது. இதில் தான் கருவறைக்கு முன்னதாக லிங்க மூர்த்தியும் உள்ளார். பிரகாரத்தில் முதல் சன்னதியில் பெரிய லிங்க மூர்த்தி ஒன்றும், அருகில் கை உடைந்த அம்பிகை மற்றும் சில அடையாளம் சொல்ல முடியா சிலைகளும் உள்ளன. அடுத்த சன்னதியில் சப்த மாதர் விநாயகர் மற்றும் ஒரு சண்டேசர் சிற்பமும் உள்ளன. இவை எவையும் பிரதிஷ்டை செய்யப்படாமல் ஆங்காங்கே கிடத்தப்பட்டுள்ளதை கண்டு மனம் வேதனைப்படுவதை தவிர்க்க இயலவில்லை. இது கோயில் தானா அல்லது காட்சிக்கூடமா என எண்ணி பெருமூச்செழுகிறது.உடைந்தவை வெளியில் கிடத்தப்பட்டுள்ளன. தனி சிற்றாலயங்களாக விநாயகர் , முருகன் சண்டேசர் சன்னதிகளுள்ளன. முருகன் தனித்த சிலையாக உள்ளார். மிக பழமையான மூர்த்தி கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. கருவறை வெளி சுவரில் விநாயகர் புடைப்பு சிற்பமாகவும், தக்ஷ்ணமூர்த்தி மட்டும் கோட்டம் போன்ற அமைப்பில் உள்ளார். அனைத்து கோயில்களிலும் தக்ஷ்ணமூர்த்தி முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை வலது கால் மீது ஆசனமிட்டிருப்பார். ஆனால் இங்கோ இடது காலை முயலகன் மீது ஊன்றி வலது காலை மேலே போட்டிருப்பார் இது பரந்தகன் கால வழக்கம் போலும். வழமையாக லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் இங்கு விஷ்ணு நின்றகோலத்தில் உள்ளார். வடபுற கோட்டத்தில் பிரம்மன் உள்ளார், துர்க்கை புடைப்பு சிற்பமாக சுவற்றில் உள்ளது. கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், குழுவினர் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்ட போது இந்த ஊரில் உள்ள வானகாத்தவநாதர் என்ற இந்த பழைமையான சிவன் கோயிலில் நான்கு கல்வெட்டுகளும், மாரியம்மன் கோயிலுக்கு அருகே மூன்று கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. இதில், மூன்று கல்வெட்டுகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. நான்கு கல்வெட்டுகள் 17 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சிவன் கோயில் கருவறைச் சுவரில், சோழர் காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு அழிந்துபோன கற்களைப் பயன்படுத்தி இந்தக் கோயில் மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் விஷ்ணுவுக்கு அருகே, உள்ள முதல் கல்வெட்டு கி.பி 921-ம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனின் 14-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணப்படுகிறது. மடைப்பள்ளி முற்றிலும் சிதைந்து விட்டது. வடமேற்கு மூலையில் சன்னதி விதானம் முற்றிலும் இடிந்து போய் வானம் பார்த்த நிலையில் இரண்டு காக்கை கொடியுடன் ஜேஷ்டாதேவி ஒரு சிம்மத்தின் மீது அமர்ந்துள்ள கோலம், உடன் மாந்தன் மாந்தி உள்ளனர். அருகில் துர்க்கை நின்ற கோலத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்பு வடபுறம் வெட்டவெளியில் நவகிரகங்கள் தரையில் வைக்கப்பட்டு இருந்தன தற்போது அதனையும் காணவில்லை. பைரவர் இருக்கும் வடகிழக்கில் ஒரு சதுரவடிவ சன்னதி ஒன்று கட்டப்பட்டுள்ளது அதில் இருக்கும் சிற்பம் அமர்ந்த கோலத்தில் உள்ளது ஆனால் வழமையான பைரவராக தெரியவில்லை. பலப்பல சிற்பங்கள் தற்கால வழக்கத்தில் இல்லாத ஒன்றாகவும், காணக்கிடைக்காத பொக்கிஷங்களாகவும் உள்ளன. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ரெட்டாகுறிச்சி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாச்சலம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top