Tuesday Sep 17, 2024

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், சேலம்

முகவரி

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில், மேச்சேரி, சேலம் மாவட்டம் – 636453.

இறைவன்

இறைவி: பத்ரகாளியம்மன்

அறிமுகம்

தித்திக்கும் மாங்கனிக்கு புகழ்பெற்ற சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோயில். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் பிரதான வாசல், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களுடன் காட்சியளிக்கிறது.

புராண முக்கியத்துவம்

வடக்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து வசந்தமண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள விதானத்தில் சிவலிங்கம், கோமுகம் போன்றவையும் காணப்படுகிறது. அதில் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் நம்மையே பார்க்கும் வண்ணம் சிங்கவாகனத்துடன் வாளேந்தி நிற்கும் பத்ரகாளியம்மன் உருவம் பஞ்சவர்ணத்தில் ஓவியமாக வரையப்பட்டிருப்பது மிக சிறப்பு. பக்தர்களின் கவனம் ஈர்க்கிறது. மகாமண்டபத்தின் சுவர்களில் நர்த்தன விநாயகர், நாகதேவதை, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், அஷ்டலட்சுமிகள், தில்லைநடராஜர், மீனாட்சி அம்மன் ஆகிய கருங்கல் சிற்பங்கள் பழங்கால சிற்பக்கலையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்த மகாமண்டபத்தின் நடுவில் நின்று தரிசனம் செய்தால் ராஜகோபுரத்தையும், மூலவர் விமானத்தையும் பத்ரகாளியம்மனையும் ஒரு சேர தரிசனம் செய்யலாம். இது தமிழகத்தில் வேறு எந்தக் ேகாயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். இவ்வாறு தரிசனம் செய்வதால் முப்பெரும் தேவிகளின் ஆசீர்வாதமும், காளியின் ஜெயமங்களயோக சித்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. இதற்கடுத்து கருவறைக்கல் மண்டபம் எனப்படும் மூலஸ்தானம் உள்ளது. இந்த மூலஸ்தான கர்ப்ப கிரகத்தில் அகிலபுவன மாதாவாக, அஷ்ட புஜங்களுடன், அர்த்த பத்மாசனத்தில் வலது காலை மடக்கி, இடதுகாலை மகிஷாசூரனின் மார்பில் வைத்து அழுத்தி தீயோரை தண்டித்து நல்லோரை காக்கும் நாயகியாக, கொற்றவையாக, வெற்றியைத்தரும் வீரதுர்க்கையாக அன்னை பத்ரகாளியம்மன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

நம்பிக்கைகள்

அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது. மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது.

சிறப்பு அம்சங்கள்

பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. ஐப்பசி தீபாவளி அமாவாசை அன்று பிரத்தியங்கராதேவி அலங்காரமும், குபேரர்பூஜையும் நடைபெறும். அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

திருவிழாக்கள்

மாசி மாதம் திருவிழா நடைபெறும்.அப்போது பூக்கரகம் எடுத்தல் ,அலகு குத்துதல், அக்னிக்குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். தமிழ்ப் புத்தாண்டு ,ஆங்கிலப் புத்தாண்டு, வைகாசி விசாகம் , சித்ரா பெளர்ணமி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், மாசி மகம், கார்த்திகை தீபம், நவராத்திரி பெருவிழா, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேச்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி, கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top