Tuesday Oct 08, 2024

பெரிச்சிகோயில் சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்,

பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி,

சிவகங்கை மாவட்டம் – 630307.

போன்: +91- 94866 71544, 97863 67380

இறைவன்:

சுகந்தவனேஸ்வரர்

இறைவி:

சமீபவல்லி

அறிமுகம்:

சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.
மதுரையில் இருந்து 60 கி.மீ., தூரத்திலுள்ள, திருப்புத்தூர் சென்று அங்கிருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள கண்டரமாணிக்கம் செல்ல வேண்டும். இவ்வூரிலிருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

புராண முக்கியத்துவம் :

இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். அவருக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது. அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு லிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் லிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார். வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, “சுகந்தவனேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

சிறப்பு அம்சங்கள்:

                 இங்குள்ள பைரவர் எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார். அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் இருக்கிறார். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார்.

காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை பிரசாதமாகக் கொடுப்பதில்லை. வடை மாலையை சன்னதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். கலியுக அதிசயமாக இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோயிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். இவர் பைரவர் சன்னதியின் பின்புறம் வன்னி மரத்தின் அடியில் காட்சி தருகிறார். இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். பக்தர்கள் பின்புற முகத்தை பார்க்க முடியாது.

வன்னி, கிணறு, லிங்கம்: அம்பாள் சமீபவல்லிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தன்னை வேண்டுவோர் அருகில் இருந்து காப்பவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். இத்தலத்தின் விருட்சம் வன்னி. கிணற்று நீர் பிரதான தீர்த்தம். அபலைப்பெண் ஒருத்திக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து மணம் முடித்து வைத்த சிவன், அவளை அவளது கணவன் கைவிட்ட போது, வன்னிமரம், கிணறு மற்றும் லிங்கமாக இருந்து சாட்சி சொன்னார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது போலவே, இந்த தலத்திலும் கிணறையும், வன்னியையும் காணலாம். பிரகாரத்தில் அருகருகே நான்கு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியருக்கும் சன்னதி உள்ளது.

திருவிழாக்கள்:

ஆனித்திருவிழா 2 நாட்கள், சிவராத்திரி, திருக்கார்த்திகை

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கண்டரமாணிக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top