Wednesday Aug 14, 2024

புஷ்கர் பிரம்மன் கோயில், இராஜஸ்தான்

முகவரி

புஷ்கர் பிரம்மன் கோயில், புஷ்கர், ஆஜ்மீர் மாவட்டம், இராஜஸ்தான் – 305022.

இறைவன்

இறைவன்: பிரம்மா இறைவி: காயத்ரி

அறிமுகம்

படைக்கும் கடவுளெனப் போற்றப்படும் பிரம்மாவுக்கென்று தனிக் கோயில்கள் மிகச் சிலவே இந்தியாவில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது இராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட்டம் புஷ்கர் பிரம்மா கோயில். விஸ்வாமித்திர மகரிஷியால் ஏற்படுத்தப்பட்ட புஷ்கர் பிரம்மா கோயில், சுமார் 2,000 வருடங்கள் பழைமையானது. இப்போதிருக்கும் ஆலயம் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள். இந்தியாவில் பிரபலமான இந்தக் கோயில் புஷ்கர் நகரின், `புஷ்கரணி’ எனும் புனிதக் குளத்தின் அருகே அமைந்துள்ளது. புஷ்கர் என்றால் `நீலத் தாமரை’ என்று சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் கருவறையில், பிரம்ம தேவர் தனது இரண்டாவது மனைவி தேவி காயத்ரியுடன் காட்சியளிக்கிறார். கார்த்திகை தீபத்தின் போது ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவார்கள்.

புராண முக்கியத்துவம்

இந்து மத வேதாங்களின் ஒன்றான ‘பத்ம புராணத்தின்’ படி, வஜ்ரனபா என்னும் அரக்கன், தனது பிள்ளைகளான மனிதர்களைச் சித்திரவாதம் செய்வதை கண்ட பிரம்ம தேவர், தனது ஆயுதம் தாமரையை கொண்டு அந்த அரக்கனை கொன்றார். ‘தாமரை ஆயுதத்தை’ எய்தபோது, அதனுடைய இதழ்கள் பூலோகத்தில் விழுந்தன. இதனால் மூன்று இடங்களில் எரிகள்: புஷ்கர் ஏரி/ஜெயஷ்ட புஷ்கர் (முதல்/பெரிய ஏரி), மத்திய புஷ்கர் (நடு ஏரி) மற்றும் கனிஷ்ட புஷ்கர் (தாழ்ந்த ஏரி) உருவானது. பிரம்ம தேவர், மக்களின் நலன் கருதி அங்கே ஒரு யாகம் நடத்த விரும்பினார். யாகம் நடக்கும் போது, கொடிய அரக்கர்களிடமிருந்து காக்க, சுற்றியும் மலைகளை: வடத் திசையில் நீலகிரி மலையயும், தெற்கு திசையில் ரத்தினகிரி மலையயும், கிழக்கு திசையில் சூர்யகிரி மலையயும் மற்றும் மேற்கு திசையில் சொன்சூர மலையயும் எழுப்பினார். இந்த மலைகளில் காவலர்களாக் தேவர்களை நியமித்தார். பின்னர், யாகம் தொடங்கியது. யாகத்தின் நடுவே பிரம்மனின் மனைவி, சாவித்ரி/சரசுவதி ‘அஹுதீ’ தர வேண்டும். அச்சமயம் சாவித்ரி தேவி அங்கே இல்லை. தன் தோழிகள் தேவி லட்சுமி, தேவி பார்வதி மற்றும் தேவி இந்திராணியை யாகத்திற்கு அழைக்க சென்றிருந்தார். பொருமை காக்காமல் பிரம்மதேவன், அங்கே இருந்த ‘குஜர்’ குலத்தை சேர்ந்த ‘காயத்ரியை’ மணந்து கொண்டு, யாகத்தை முடித்தார். தேவி சாவித்ரி தனது தோழிகளுடன் யாகத்துக்கு வந்தடைந்தார். அப்போது, காயத்ரி தேவி பிரம்ம தேவனுடன் ‘அமுதபானைக்’ கொண்டு நின்றிருந்ததை கண்டு கோபம் கொண்டார். சினத்தில் தேவி சாவித்ரி, ‘பிரம்ம தேவன் எங்கும் வழிபட மாட்டார்’ என்று சாபம் அளித்தார். யாகத்தால் வரம் பெற்ற தேவி காயத்ரி, இந்த சாபத்தை, ‘பிரம்ம தேவன், புஷ்கரில் மட்டும் வழிபடுவார்’ என்று மாற்றி அமைத்தாள். சினங்கொண்ட தேவி சாவித்ரி, ரத்னகிரி மலைக்குள் புகுந்து நீருற்று ஆனார். பின்னர். அது இன்றும் உள்ளது, ‘சாவித்ரி ஜர்னா’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நம்பிக்கைகள்

புஷ்கர் ஏரி புனித தீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இங்கு தீர்த்தமாடி, தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறப்பானது. இந்த ஏரியில்தான், முதலையின் வாயில் சிக்கித் தவித்த யானையை திருமால் காத்தருளிய `கஜேந்திர மோட்சம்’ நடந்ததாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். புஷ்கர் பிரம்மாவின் கோயிலைத் தரிசித்தால் தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

புஷ்கர் பிரம்மன் ஆலயம் செந்நிறத்தில் அழகிய கோபுர‌த்தை‌க் கொண்டுள்ளது. கோயிலின் வாசலில் நான்முகனின் வாகனமான அன்னம் அழகுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் கருவறையில் பிரம்மா, காயத்ரி தேவியுடன் காட்சியளிக்கிறார். இங்கு பூஜை செய்யும் பூசாரிகள் அனைவரும் பிரம்மச்சாரிகள். புஷ்கர் பிரம்மா ஆலயத்தின் பின்புறத்திலுள்ள மலையின் மீது சரஸ்வதிக்கான கோயில் அமைந்துள்ளது. சினம் தணிந்த சரஸ்வதிதேவி, பிரம்மாவுக்கு இங்குதான் காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய காயத்ரி மந்திரத்தை விஸ்வாமித்திரர் மனிதகுல நன்மைக்காக உபதேசித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

திருவிழாக்கள்

புஷ்கர் பிரம்மா கோவிலில் கார்த்திகை தீபவிழா பிரசிதிபெற்றது. புஷ்கர் கார்த்திக் பூர்ணிமா மேளா என்ற பெயரில் உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரமுகர்கள், பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு நடக்கும் ஒட்டகச் சந்தையும் விசேஷமானது.

காலம்

14 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புஷ்கர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அஜ்மீர்

அருகிலுள்ள விமான நிலையம்

ஜெய்ப்பூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top