Monday Oct 14, 2024

பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில் (பல்லவனீச்சுரம்) – காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் – 609 105. சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். Ph:0 94437 19193.

இறைவன்

இறைவன்: பல்லவனேஸ்வரர் இறைவி: சவுண்டரநாயகி

அறிமுகம்

திருப்பல்லவனீச்சுரம் – காவரிப்பூம்பட்டினம் – பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை தலம் சிவன் கோவிலாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 10வது சிவத்தலமாகும். காலவ முனிவர் வழிபட்ட தலம்.பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது.[1] இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ தொலைவில் கடல் உள்ளது.

புராண முக்கியத்துவம்

முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார். இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில், “”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. “”மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,” என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்’ என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

நம்பிக்கைகள்

அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி, கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காவிரி, கடலுக்குள் புகும் இடம் என்பதால் “காவிரிபுகும்பட்டினம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது “பூம்புகார்’ என்றழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம். ஆடியில் பட்டினத்தார் விழா.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பல்லவனீச்சுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top