Saturday Jul 27, 2024

துவாரகா துவராகாநாதர் திருக்கோயில், குஜராத்

முகவரி

அருள்மிகு கிருஷ்ணர், துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்) திருக்கோயில் துவாரகா – 361 335. ஜாம் நகர் மாவட்டம், குஜராத்

இறைவன்

இறைவன்: துவராகாநாதர் இறைவி: ருக்மணி

அறிமுகம்

துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவான் அரசாட்சி நடத்தி வாழ்ந்த புண்ணிய பூமியான துவாரகா நகரம், பாரத நாட்டிலுள்ள ஏழு முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த தலத்திற்கு குசங்கலீ, ஓகா (உஷா) மண்டல் என்றும் பெயர்கள் உண்டு. மேலும் இந்த தலம் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களின் நுழைவாயிலாகக் கருதப்படுவதால் துவாரகா அல்லது துவாரகாதீ என்று இது பெயர் பெற்றது. கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு எதிராக கண்ணனின் தாயார் தேவகி சன்னிதானம் உள்ளது. துவாரகையில் இருந்து 12 கி.மீ., தொலைவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான நாகேஸ்வரம் மகாதேவர் கோயில் உள்ளது. கண்ணனை ஆன்மிக குருவாகவும் சாரதியாகவும் கண்டான் காண்டீபன். மானம் காத்த தெய்வமாகக் கண்டாள் பாஞ்சாலி. நண்பனாகக் கண்டான் குசேலன். தங்களை ஆகர்ஷிக்கும் கிருஷ்ணனாக, காதலனாகக் கண்டனர் கோபிகையர். பாரதியோ, சேவகனாகக் கண்டான். ஆனால், அவனை மன்னனாக இன்றளவும் காண்கின்றனர் துவாரகாபுரி மக்கள். துவாரகை-கட்ச் வளைகுடா அருகில் உள்ளது. பண்டைய வேத சாஸ்திரங்கள், இந்தப் புண்ணியத் தலம் கிருஷ்ணருடைய ராஜ்ஜியமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றன. அவர் தமது யாதவ குலத்தை ஜராசந்தனிடமிருந்து காப்பதற்கு மதுராவை விட்டு இங்கு ஓர் பொன்னாலான நகரத்தை நிர்மாணித்தார். அதற்கு குசஸ்தலி அல்லது துவாரவதி என்றும் பெயரிடப்பட்டது. அதுவே பின்னாளில், துவாரகா என்று மாறியது. யாதவர்களும் கிருஷ்ணரும் மறைந்த பின்னர் அந்த பிராந்தியமே கடலில் மூழ்கியது, கிருஷ்ணரின் மாளிகையைத் தவிர. பல வருடங்கள் கழித்து அவருடைய கொள்ளுப் பேரன் வஜ்ரனபி அந்த மாளிகைக்கு அருகிலேயே ஒரு கோயிலைக் கட்டினான். இன்றைய துவாரகை கோமதி நதியும் அரபிக் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கணக்கற்ற பக்தர்களைத் தம் வசம் இழுக்கும் உன்னதத் தலங்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. காசியைப் போலவே படித்துறை, கோயிலலைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தாலும், துர்நாற்றமோ தூசுபடிதலோ இல்லை.

புராண முக்கியத்துவம்

கிருஷ்ணரின் தாய்மாமன் கம்சன் அவருடைய மாமனாராகிய ஜராசங்கு கிருஷ்ணன் மீது 16 முறை படையெடுத்து தோற்று போனார். 17வது முறை சண்டையிட்டபோது மதுரா நகரிலிருந்து மக்களை வெளியேற கிருஷ்ணர் ஆணையிட்டார். அப்போது கிருஷ்ணர் சௌராஷ்டிரா தேசம், ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் வாழ்ந்து வந்த ஒரு மகாராஜாவின் மகள் ருக்மணியை மணந்து 100 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிந்தார். ஒரே நாளில் ஒரே இரவில் இப்பகுதியை தங்கத்தால் ஆன நகராக துவாரகாவை உருவாக்குகிறார். கண்ணன் பாதம் பட்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். கண்ணன் இங்கே அரசனாக வாழ்ந்திருந்து மக்களிடையே கலந்து பழகியிருக்கிறார். அதனால் பக்தர்கள் அவரை அரசனாகவும் போற்றுகிறார்கள். பகவானாகவும் துகிக்கிறார்கள். கம்சனைக் கொன்ற பிறகு மதுராவுக்கு உக்ரசேனனை அரசனாக்கினார் கிருஷ்ணன். இது, கம்சனுடைய மாமனாரும்- மகத தேசத்து அரசனுமான ஜராசந்தனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அவன் மதுராமீது போர் தொடுத்தான். ஜராசந்தனுடைய சேனையை எதிர்த்து நிற்க முடியாமல் யாதவ சேனை பின்வாங்கியது.இதனிடையே, யாதவர்களால் தன் தந்தை அவமானப்படுத்தப்பட்டதை நாரதர் மூலம் அறிந்த காலயவனன் என்ற அரசனும் பெரும்படையுடன் மதுராவைத் தாக்கினான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த கிருஷ்ணர், மீதமிருந்த யாதவ சேனைகளையும் மக்களையும் அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் வந்து, சமுத்திர ராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார். அதன்படி கடல் பன்னிரண்டு யோசனை தூரம் உள்வாங்கியது. கடல் கொடுத்த பூமியில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அற்புதமான நகரை நிர்மாணித்து, யாதவ மக்களையும் மாடு- கன்றுகளையும் அங்கு குடியேற்றினார் கிருஷ்ணர். இப்படித் தோன்றியதுதான் துவாரகா. கிருஷ்ணன் வாழ்ந்த காலத்திலிருந்த துவாரகா இப்போது இல்லை. அதை கி.பி. 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர். பின்னாளில் 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் குஜ்ராத்தை ஆண்ட சாளுக்கிய அரச பரம்பரையினர் கட்டியதுதான் இப்போதுள்ள கோவில் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த துவாரகா கிருஷ்ணர் கோவில், சோமநாதர் கோவில் பாணியில் அமைந்திருப்பதை அதற்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது. கருவறையில் துவாரகாதீஷ் (ஸ்ரீகிருஷ்ணன்) சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.

நம்பிக்கைகள்

அக்காலத்தில் மகத தேசத்தை ஆண்டு வந்த ஜராசந்தன் எனும் அரசன் காரணமின்றி ஸ்ரீ கிருஷ்ணன் மீது பகைமை பூண்டு யாதவர்கள் மீது போர் தொடுத்தான். போரில் கிருஷ்ணர் அவனை தோற்கடித்து ஓடச் செய்தார். இப்படி பதினேழு முறை. இதில் யாதவர்கள் பக்கமும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பதினெட்டாவது முறையும் அவன் போர் அறிவித்தான். தன்பொருட்டு யாதவகுலம் அழிவதை விரும்பாத கிருஷ்ணர், விஸ்வகர்மாவின் மூலம் கடல் நடுவே தீவில் ஒரு பெரிய நகரத்தை நிர்மாணம் செய்வித்து இரவோடு இரவாக தன்னவர்களோடு அவ்விடத்திற்கு குடி பெயர்ந்து விட்டார். அதுதான் த்வாரகை.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன. இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கீழே சன்னிதானமும், மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம். துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

திருவிழாக்கள்

கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் . கோகுலாஷ்டமி அன்று பாவன் பேடா என்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு ஆடும் இந்த நடனம் பார்க்க அருமையாக இருக்கும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

குஜராத்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

துவாரகா

அருகிலுள்ள இரயில் நிலையம்

துவாரகா

அருகிலுள்ள விமான நிலையம்

ஜாம்நகர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top