Tuesday Oct 08, 2024

தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், அரியலூர்

முகவரி

தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் – 621704

இறைவன்

இறைவன்: ஜமதக்னீஸ்வரர் இறைவி: அமிர்தாம்பிகை

அறிமுகம்

தீயனூர் ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமான் திருக்கோயில் ஆகும். அரியலூரிலிருந்து சுமார் 28 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து வாரனவாசி, பளுவூர் மற்றும் பொய்யூர் வழியாகவும், அயனாத்தூர் மற்றும் தெலூர் வழியாகவும் இரண்டு வழித்தடங்களில் இக்கோயிலை அடையலாம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மேலும் பழமையான தேவார வைப்புத் தலம் ஆகும். சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காக இங்கு வந்து தங்கி வில்வ மரத்தின் கீழ் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்க மூர்த்தமே, ஜமதக்னீஸ்வரர் ஆனது. (அக்னி வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு). அன்னை அமிர்தாம்பிகை சன்னதியின் விமானம் கூம்பு வடிவ அமைப்பில் உள்ளது. தலையில் அழகிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, இரண்டு காதுகளிலும் பத்ர, மகர குண்டலங்கள், கழுத்தில் அழகிய தாலி, கைகளில் வளையல், கால்களில் சதங்கை என அணிமணிகள், மேல் வலது கையில் அட்சமாலை, இடது கையில் நீலோற்பவ மலர், முன் வலக்கையை அபயமுத்திரையுடனும், இடக்கையை தொடையில் ஊன்றியவாரும் அம்மன் காட்சி தருகிறார்.

புராண முக்கியத்துவம்

இரண்டாம் ராஜராஜன் காலத்தில் கற்றளியாக கி.பி. 1166ல் கட்டப்பெற்ற பழமையுடையது. இவ்வூரின் தொன்மையான பெயர் தீயனூர். இவ்வூருக்கு மனுகுலகேசரி நல்லூர் என்ற பெயர் இருந்ததாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுதப்பட்ட முதலாம் இராஜாதிராஜன் கல்வெட்டு சொல்கிறது. தற்போது உடையவர் தீயனூர், பெருமாள் தீயனூர் என்னும் இரண்டு சிற்றூர்கள் உள்ளன. சிவன் கோயில் அமைந்த பகுதி உடையவர் தீயனூர்; விஷ்ணுகோயில் அமைந்துள்ள பகுதி பெருமாள் தீயனூர். வெப்பம் மிகுந்த பிரதேசமாதலால் தீயனூர் என்றழைக்கப்பட்டது. புராண காலத்தில் இப்பகுதி வில்வ மரங்கள் நிறைந்த வனப்பிரதேசமாக இருந்தமையால் வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இந்த வனத்தில் சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காக இங்கு வந்து தங்கி வில்வ மரத்தின் கீழ் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்க மூர்த்தமே, ஜமதக்னீஸ்னீ வரர் ஆனது. (அக்னி வழிபட்டதால் அக்னீஸ்னீ வரர் என்ற திருப்பெயரும் உண்டு.) திருக்கோயிலை ஒட்டியுள்ள தீர்த்தக்குளம் அக்னி தீர்த்தமாகவும், இங்கு ஓடும் மருதையாறு, புண்ணிய தீர்த்தமாகவும் திகழ்கிறது. ஜமதக்னியின் அறிவுரைப்படி பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்க, பழுவூருக்கு வடக்கில் ஓடும் மருதை ஆற்றில்தான் நாள்தோறும் தீர்த்தமாடி ஈசனை வழிபட்டு வந்தார். எனவே, இந்த நதி பரசுராம நதி என்ற சிறப்புப் பெயராலும் அறியப்படுகிறது.

நம்பிக்கைகள்

வயிற்றுவலி, கண்நோய், சூலை நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், நவகிரக தோஷங்கள் நீங்கவும் இங்கு வழிபடுகின்றனர். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின்மேல் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூவகை சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதத்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்ட நாயகர்களும் இத்தலத்தில் காணப்படுகின்றனர். கோயிலுக்கு பின்புறம் மேற்கு திசையில் அக்னி தீர்த்தம் என்னும் திருக்குளம் அமைந்துள்ளது. துர்க்கையின் வாகனமான எருமை தலையும் இத்தலத்தில் உள்ளது. துர்க்கையின் சிற்பத்திற்கு மாறாக சிறிய அளவில் லிங்கோத்பவர் சிற்பம் எருமை தலையின் மேல் வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி அகியவை கொண்டாடப்படுகிறது.

காலம்

கி.பி. 1166

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உடையவர் தீயனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அரியலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top