Friday Sep 06, 2024

திருவாஞ்சியம் அவாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில் திருவாஞ்சியம் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 610110 PH:9442403926

இறைவன்

இறைவன்: வாஞ்சி நாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேசுவரர், இறைவி: மங்களநாயகி, வாழவந்தநாயகி

அறிமுகம்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது. “காசியைவிட வீசம் அதிகம்” என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம். இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. எமன் வழிபட்ட தலம்; இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் தொன்நம்பிக்கைகளாகும். திருமகள், இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம்.

புராண முக்கியத்துவம்

“எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்’ என எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, “”வேண்டும் வரம் கேள்,”என்றார். அதற்கு எமனும், “”இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,”என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், “”எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,”என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் – பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, “நட்டுவன் பிள்ளையார் சந்நிதி’ தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் – சிவலிங்கத் திருமேனி – சுயம்பு – சற்று தடித்த உயர்ந்த பாணம். உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன. தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலா வடிவம் உள்ளது.

நம்பிக்கைகள்

மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 133 வது தேவாரத்தலம் ஆகும். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். குப்த கங்கை : ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,””மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,”என வேண்டினாள். அதற்கு சிவன்,””உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,”என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை ஞாயிறு: தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார். ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் “ஸ்ரீவாஞ்சியம்’ ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள். துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள். ராகுவும் கேதுவும் ஒரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது. யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார். யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

இரண்டாம் நாளே தீர்த்தவாரி : எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாஞ்சியம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top