Saturday Oct 12, 2024

திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருலோக்கி அஞ்சல் வழி துகிலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 609804

இறைவன்

இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், திரு விசைப்பா பாடலில் இடம் பெற்றதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றானதும், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி ரதிதேவி வழிபட்டதும், ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில். முற்காலத்தில் ஏமநல்லூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்வெட்டுகளில் இவ்வூர், மாமன்னன் முதலாம் ராஜராஜனின் தேவியருள் ஒருவரான திரைலோக்கிய மாதேவியின் பெயரில், ‘விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு திரைலோக்கியாகிய மாதேவியார் சதுர்வேதி மங்கலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜராஜனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ராஜேந்திரச் சோழன் காலம் தொடங்கி (கி.பி.1012-1014) மூன்றாம் ராஜராஜ சோழன் காலம் (கி.பி.1236) வரையான பல கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் காணப்பட்டாலும், இவ்வாலயத்தை கட்டியவர் யார் என்ற விவரம் எதிலும் இடம்பெறவில்லை. அப்பர் பெருமான் ‘ஏமநல்லூர்’ என தன் சேத்திரக்கோவையில் இவ்வூரை குறிப்பிட்டுள்ளார். ஏமநல்லூர் என்பதில் வரும் ‘ஏமம்’ என்ற சொல்லுக்கு ‘பொன்’ என்று பொருள். நவக்கிரகங்களில் ‘பிரஹஸ்பதி’ எனப்படும் குரு பகவானுக்கு ‘பொன்னவன்’ என்றொரு பெயரும் உண்டு. பொன்னவனான குரு தன் தோஷம் போக்கியருளுமாறு இங்குள்ள இறைவனை வேண்டி வழிபட்டதால் இவ்வூருக்கு ‘ஏமநல்லூர்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. கருவூர்த்தேவர் தனது திருவிசைப்பாவில் ‘திரைலோக்கிய சுந்தரம்’ என இவ்வூரை குறிப்பிட்டுள்ளார். திரைலோக்கியே ‘திருலோக்கி’ என மருவியுள்ளது. பிருகு முனிவர், தேவ குருவான பிரஹஸ்பதி மற்றும் சுகேது ஆகியோர் இவ்வாலய இறைவனை வழிபட்டுள்ளனர். திருக்குறுக்கை திருத்தலத்தில் சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். இத்தல இறைவன் ‘சுந்தரேஸ்வரர்’. இறைவியின் திருநாமம் ‘அகிலாண்டேஸ்வரி.’ தலவிருட்சம் சரக்கொன்றை. தீர்த்தம் – லட்சுமி தீர்த்தம்.

புராண முக்கியத்துவம்

ஒருசமயம் குரு பகவான், தன்னை அறியாது செய்த பாவங்களுக்கு விமோசனம் வேண்டி ஆலய தரிசனத்தை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து வந்தார். ‘மத்தியார்ச்சுனம்’ எனப்படும் திருவிடைமருதூருக்கு வருகை தந்து, அங்குள்ள மகாலிங்க சுவாமியை வழிபட்டார். குருபகவானுக்கு அருள்பாலித்த மகாலிங்கசுவாமி, “எனக்கு கிழக்கு திசையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் சுந்தரேஸ்வர பெருமானை வழிபட்டால், உம்மை பிடித்த பாவங்கள் விலகி விமோசனம் கிடைக்கும்” எனப் பணித்தார். அதன்பேரில் இத்தலம் வந்த குரு பகவான் தவம் இயற்றினார். ஒரு சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் திருநட்சத்திரம்) அன்று, சுந்தரேஸ்வர பெருமானின் லிங்கத் திருமேனிக்கு குரு பகவான் கொன்றை மாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்தார். பசு நெய்யால் விளக்கேற்றி, தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார். அவரது சிரத்தையான பூஜையில் மகிழ்ந்த சுந்தரேஸ்வரப் பெருமான், தேவர்களும் பூதகணங்களும் புடைசூழ, ரிஷப வாகனத்தில் அன்னை அகிலாண்டேஸ் வரியை ஆலிங்கனம் செய்தவாறு குரு பகவானுக்கு காட்சிதந்தார். மேலும் “பிரஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த, நீ முக்கிய காரணமாக இருப்பாய். உனது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி, குரு பலம் பெற்று அனைவரும் மகிழ்ச்சியான இல்வாழ்க்கை வாழ்வர். அதற்கேற்ப உனது பலமும் பெருகட்டும்” என்று வரமருளினார். மன்மதன் உயிர்பெற்ற வரலாறு: அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான கொற்கை எனப்படும் திருக்குறுக்கை திருத் தலத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டான், காமத்தின் கடவுளாக பாவிக்கப்படும் மன்மதன். அவனது பிழையைப் பொறுத்து, மீண்டும் அவனுக்கு உயிர்பிச்சை அளிக்கும்படி, சிவபெருமானை ரதிதேவி வேண்டினாள். “திரைலோக்கி சுந்தரனை வணங்கி வழிபட, உன் கணவன் உயிர்பெற்று வருவான்” என சிவன் வரமளித்தார். அதன் பொருட்டு இத்தலம் வந்த ரதிதேவி, இங்குள்ள இறைவனை வணங்கி வழிபட இறையருளால் மன்மதன் உயிர்பெற்றான். பின்னர் இருவரும் ஒன்றாக இறைவனை வணங்கி அருள்பெற்றனர். இதை குறிக்கும் விதமாக இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ள ரதி-மன்மத, ஆலிங்கன மூர்த்தியின் சிலாரூபம் பேரழகு பெட்டகமாக திகழ்கிறது. வலது கையில் புஷ்பம் ஏந்தியும், இடது கையால் ரதியின் தோளைத் தழுவியபடியும் மன்மதன் காட்சி தருகிறான். வலது கரம் காமதேவனை அணைத்தும், இடது கையில் ஜடை மாலையும், தலையில் அலங்காரக் கொண்டையுடன் உடலை சற்று வளைத்து ஒய்யாரமாக நிற்கும் ரதிதேவியின் வடிவம் வார்த்தை களால் வருணிக்க இயலாததாகும். குரு பகவானுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர வடிவம், மிகமிக அற்புதமான சிற்ப வடிவமாகும். கருங்கல்லாலான நந்தியின் மேல் ஒரு பீடத்தில், சிவம் தழுவிய சக்தியாக, சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய கருங்கற்திருமேனியான இது, வேறெங்கும் காணமுடியாத அபூர்வ படைப்பாகும். இரு கரங்களில் சூலம், மான் ஏந்தியும், முன் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் அம்பிகையை அணைத்தும் அழகு வடிவத்தில் சிவபெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையும் அவருக்கு ஈடுகொடுத்து இடது காலை மடக்கியும் வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டும் உடம்பை வளைத்தவாறு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் எழில் வடிவத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அம்பிகையின் வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும், இடது கரத்தில் மலர் ஏந்தியும், உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறார்.

நம்பிக்கைகள்

நாள்தோறும் இருகால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், ஒரு விசேஷ பரிகாரத் தலமாகும். ‘பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த, நீ முக்கிய காரணமாக இருப்பாய்’ என குரு பலத்தை குருபகவானுக்கு ஈசன் அருளியதும், ரதிதேவி வேண்டுகோளுக்கிணங்க காமக்கடவுளை மீண்டும் பிறக்கச்செய்து அருள்பாலித்ததுமான ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். எனவே திருமணத்தடை உள்ளவர்கள், மக்கட்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட அந்தக் குறைகள் விரைவில் நீங்கும். மேலும் ஒருவரது ஜாதகத்தில் குரு மறைந்திருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, அந்த ஜாதகர் இங்கு வந்து இறைவனை வணங்கினால், சிவனருளோடு, குருவருளையும் பெறலாம். ரதிதேவி மன்மதனை திரும்பப்பெற்ற தலமாதலால், சிறந்த மாங்கல்ய தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. ஆகவே கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இத்தலம் வந்து, உமாமகேஸ்வரப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையும் பாக்கியத்தைப் பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்

தேரோடும் வீதிகள் நான்கும் சூழ, நடுநாயகமான ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட மூன்றுநிலை ராஜகோபுரத்தின் வாசலை அடுத்து, வவ்வால் நெற்றி மண்டபம் காணப்படுகிறது. அடுத்ததாக 36 தூண் களைக் கொண்ட மண்டபம் இடம்பெற்றுள்ளது. இந்த மண்டபத்தின் மேற்கூரை எண்கோண வடிவில் மூன்று அடுக்குகளையும், சதுரவடிவில் ஓர் அடுக்கையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கணித சக்கரவர்த்தி என்பவர் இம்மண்டபத்தைக் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மண்டபத்தின் தென்பகுதியில் ‘அன்னை அகிலாண்டேஸ்வரி’ என்ற பெயரில் உமாதேவியார் வீற்றிருக் கிறார். இவ்வாலயத்தின் அம்மன் சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு வலதுபக்கத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து மகாமண்டபம் உள்ளது. இங்கு ஆலிங்கனமூர்த்தியாக இடம்பெற்றுள்ள ரதி-மன்மதன் சிற்பம் இருக்கிறது. அதையடுத்து அர்த்த மண்டபம். இந்த மண்டபத்தை தாண்டி கருவறையில், மூலவர் திரைலோக்கிய சுந்தரரான சுந்தரேசப்பெருமான் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். கருவறைக் கோட்டத்தில் தென் முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கு பிரகாரத்தில் கன்னிமூல கணபதியும், அதனருகில் கிழக்கு நோக்கி புதிதாக அமைக்கப் பெற்ற சித்திரசபையில் உமாமகேஸ்வரமூர்த்தி ரிஷப வாகனத்திலும் அருள்பாலிக்கின்றனர். அருகில் குருபகவான் கரங்கூப்பிய நிலையில் இருக்கிறார். இதன் பின்புறம் கண்ணாடி பொருத்தப்பெற்று, குரு பகவான் பூஜித்த சிவலிங்கத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடதுபுறம் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இது தவிர விஸ்வநாதர், பைரவர், துர்க்கை, சண்டேசர் சன்னிதிகளும் இங்கு காணப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருலோக்கி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top