Monday Sep 16, 2024

திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்-607 002, கடலூர் மாவட்டம். போன் +91-4142- 236 728, 98949 27573, 94428 32181

இறைவன்

இறைவன்: பாடலேஸ்வரர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலம் திருப்பாதிரிப்புலியூர் புகையிரத நிலையத்தில் இருந்து 0.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது பல்லவ, சோழ காலங்களில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாதிரி மரத்தின் வடமொழிப்பெயர் பாடலம் என்பதாகும்.

புராண முக்கியத்துவம்

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே.ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.

நம்பிக்கைகள்

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இத்தலத்தில் வேண்டிக்கொள்ளும் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. விரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம் -10 நாட்கள் – வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு – 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி – மாசி மாதம் ஆடி பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம் – 2 க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும்.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பாதிரிப்புலியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பாதிரிப்புலியூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top