Monday Oct 14, 2024

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர் – 602 024 திருவள்ளூர் மாவட்டம் போன்: +91- 44-5517 3417

இறைவன்

இறைவன்: பக்தவத்சலப் பெருமாள் இறைவி: என்னைப்பெற்ற தாயார்

அறிமுகம்

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம்.திருநின்றவூரில் அமைந்துள்ளது. சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றது. இக்கோயிலில் உள்ள மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) ஆவார். தாயார், பெருமாள் சன்னதிகளுடன் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன.

புராண முக்கியத்துவம்

திருமங்கை ஆழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் வழியாக சென்றார். ஆனால், இத்தலத்தை பாடவில்லை. இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொன்னார். அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடன் மல்லை கோயிலுக்கு போய் விட்டார். அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றைக் கேட்டார். “நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மலலை தலசயனத்தே’ என்று பாடினார் ஆழ்வார். இதன் பொருள்: “எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடன் மல்லையாகிய மாமல்லபுர திருத்தலத்தில்’ என்பது தான். இப்படி, இந்த உலகையே காக்கும் பெருமாளே, பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாடல் வாங்கிச்சென்றார். பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார்,””என்ன இது! எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?” என கேட்கிறார். இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார். அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்.

நம்பிக்கைகள்

இத்திருக்கோயிலில் கிடைக்கும் ‘குபேரயந்திரத்தை வாங்கி பூஜை செய்து தாயாரை வழிபட்திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து தரிசித்தால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது இவரை வழிபட்டால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.டால் சகல ஐஸ்வர்யங்களும் கைகூடுமாம்.

சிறப்பு அம்சங்கள்

பெயர்க்காரணம்: பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு “திரு’வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் “திருநின்றவூர்’ ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). அவள் வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம், “”பகவானே! தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்” என்றான். அதற்கு பெருமாள், “”நீ முன்னே செல். நான் பின்னால் வருகிறேன்”என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே “என்னைப்பெற்ற தாயார்’ எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும்”என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். பக்தன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் இங்கு வந்ததால் அவரது திருநாமம் “பக்தவத்சலன்’ ஆனது. சமுத்திரராஜன் மகாலட்சுமியை “என்னைப்பெற்ற தாயே’ என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். கோயில் அமைப்பு: விஜயநகர காலத்தை சேர்ந்த ராஜகோபுரம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருட சன்னதி, மகா மண்டபம், உள் மண்டபம் தாண்டி சென்றால், பெருமாள் திருமகள், பூமகளுடன் நின்ற திருக்கோலத்தில் பஞ்சாயுதம் தாங்கி சுமார் 11 அடி உயரத்தில் அருளுவதைக் காணலாம். மூலவரின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரி காத்த ராமர், ஆதிசேஷன் ஆகிய சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்

பங்குனியில் திருவோண விழா, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திருநட்சத்திரங்கள், சித்ரா பவுர்ணமி, திருக்கல்யாண உற்சவம், தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், தைப்பொங்கல், ரதசப்தமி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநின்றவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநின்றவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top