Saturday Jun 15, 2024

திருநாங்கூர் புருஷோத்தமப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம்.

இறைவன்

இறைவன்: புருஷோத்தமன் இறைவி: புருஷோத்தம நாயகி

அறிமுகம்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 32-வது தலமான அருள்மிகு வண்புருஷோத்தம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ புருஷோத்தம நாயகி தாயார் சமேத ஸ்ரீ வண்புருஷோத்தம பெருமாள் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. செல்ல வேண்டும். சீர்காழியிலிருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்மேற்கு மூலையில் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னதிகள் உள்ளன. இத்தல மூலவர் கிழக்கு பார்த்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சஞ்சீவி விக்ரக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை காட்சி கண்டவர்கள் உபமன்பு, வியாக்ரபாத முனிவர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர்.

புராண முக்கியத்துவம்

சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகா விஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள். 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தல பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை. மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வன்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப்பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

குழந்தைக்கு வரும் துன்பத்தை தாய்தந்தை போக்குவர். தம்மிடம் தோன்றிய பிரம்மா முதலான தேவாதி தேவர்கட்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தை ரட்சிக்கும் புருடோத்தமன் இவனே. இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் புருஷோத்தமன். “புருஷோத்தம இதி வைஷ்ணவா” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானை புருஷோத்தமன் என்ற பெயரில் அழைப்பார்கள். இவனைப் பற்றிக் கூறும் வித்தைக்கு “புருஷோத்தம வித்னய” என்று பெயர். புருஷோத்தமனைத் தான் தூய தமிழில் புருடோத்தமன் என்கிறார் மங்கை மன்னன். (பக்தர்களும், முக்தர்களும், நித்யர்களுமாகிய புருஷர்கள்யாவரினுஞ் சிறந்தவனென்னும் பொருள்படும்) குறைவில்லா ரட்சிப்புத் தன்மைகொண்டு வள்ளல்போல் தன் அருளை வாரி வழங்குதலால்(வள்ளல் தன்மையை உயர்வு படுத்திக் காட்ட) வண் புருடோத்தமன் ஆனான். இந்த சம்பந்தத்தால் இத்தலம் வண் புருடோத்தம மாயிற்று. உத்தமன்- என்னும் சொல்லுக்கு பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானம் யாதெனில், புருஷர்கள் மூவகை முதல்வகை அதமன் தான் இன்பமுற அடுத்தவன் துன்புற்றாலும் கவலையில்லையென்று எண்ணுபவன். 2வது வகை மத்திமன் தான் இன்பமுறுதல் போல் அடுத்தவனும் இன்பமுற வேண்டும் என்று எண்ணுபவன் 3வது வகை உத்தமன் தான் துன்பமுற்றாலும் பரவாயில்லை அடுத்தவன் இன்பமுறவேண்டுமென நினைப்பவன். எம்பெருமானின் அவதார ரகசியங்கள் தான் துன்பமுற்றாலும் பரவாயில்லை உலகம் இன்பமுற வேண்டுமென அவதார மெடுத்ததால் இவனே உத்தமன் என்றாயிற்று. அதானாலன்றோ ஆண்டாளும் “ஓங்கியுலகளந்த உத்தமன்” என்றார். 1) இங்குள்ள உற்சவர் மிக அழகானவர் 2) அயோத்தி எம்பெருமானே இங்கு பதினொருவரில் ஒருவராக எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா அயோத்தியில் உள்ளவன்தான் புருடோத்தமன் என்பதை திருமங்கையாழ்வார் மட்டுமல்ல, பெரியாழ்வாரும், வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை – என்றார். அந்த அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளியமையால் புருடோத்தம திருநாமம் உண்டாயிற்று. 3) திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் 4) மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார். 5) பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது.தை அமாவாசைக்கு மறுநாளான கருட சேவைக்கு இந்தப் புருடோத்தமனும் புறப்படுவார். 6) தமிழ்நாட்டில் சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் பெண்கள் பந்து விளையாடியதை இலக்கியங்கள் பேசுகின்றன. இவ்வூரின் பெண்கள் பந்து விளையாட்டில் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். இவ்வூரில் பந்தடிக்கும் பெண்களின் கால்களில் உள்ள சிலம்போசையும், கைவளையல்களின் ஓசையும் எந்நேரமும் மல்கியிருக்குமாம், திவ்யதேசங்களின், மருங்கமைந்த இயற்கைச் சூழ்நிலைகளையும், பிற நிகழ்வுகளையும் தம் பாடல்களில் விரித்துரைக்கும் திருமங்கை இதை விட்டுவிடுவாரா என்ன. இதோ இதைப் பற்றித் திருமங்கை கூறுகிறார். 7) வ்யாக்ர பாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம் பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாத முனிவருக்கும் காட்சி தந்தார் என்பதும் இத்தலத்தோடு வரலாறாகும்.

திருவிழாக்கள்

பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநாங்கூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top