Saturday Oct 05, 2024

திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர் – 613 705 குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம். போன் +91- 4366 – 262 239.

இறைவன்

இறைவன்: வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர் இறைவி: சௌந்தர் நாயகி

அறிமுகம்

திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 113ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. இத்தலம் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தர் அடியவரோடு ஓடம் ஏறி அதனைப் பதிகம் பாடிச் செலுத்தி மறுகரை அடைந்தார் என்பது தொன்நம்பிக்கை.இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி விபுலானந்தர் இயற்றிய யாழ் நூல் அரங்கேறிய திருத்தலமும் இதுவே.

புராண முக்கியத்துவம்

பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, “கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே’ எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.

நம்பிக்கைகள்

வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகளில்லை. தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது. இதன் வழியே உள்ளே நுழைந்தால் அம்பாள் சந்நிதி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 177 வது தேவாரத்தலம் ஆகும். பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது. கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.

திருவிழாக்கள்

சித்திரை பிரமோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்திபுறப்பாடு. நவராத்திரியில் அம்மன் புறப்பாடு. ஐப்பசி அமாவாசையில் திருஞான சம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கொள்ளம்புதூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top