Tuesday Oct 08, 2024

திருஅறையணிநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம். போன் +91-93456 60711, 99651 44849

இறைவன்

இறைவன்: அதுல்யநாதேஸ்வரர் இறைவி: அழகிய பொன்னழகி, செளந்தர்ய கனகாம்பிகை

அறிமுகம்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தின் மூலவர் அதுல்யநாதேஸ்வரர்(ஒப்பில்லாமணிஸ்வரர்), தாயார் சௌந்தயகணகபிகை (அழகிய பொன்னழகி).

புராண முக்கியத்துவம்

மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மகாவிஷ்ணு, உயிரைக் கொன்ற தோஷம் நீங்க சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி பல தலங்களுக்கும் சென்ற மகாவிஷ்ணு, இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது, சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார். மகாவிஷ்ணு தாயாரை பிரிந்து தனியே வந்ததால், ஸ்ரீதேவியும் மகாவிஷ்ணுவைத் தேடி இத்தலத்திற்கு வந்தாள். இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார். பிற்காலத்தில் நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவதல யாத்திரை சென்றார். அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி சிறு குன்றாக இருந்த இத்தலத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு, இந்த தலத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. எனவே, சிவனை எண்ணி இவ்விடத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்காக மனம் இரங்கிய சிவன், அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாபவிமோசனம் கொடுத்தருளினார். நீலகண்ட முனிவர் சிவனிடம், தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுமென வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி “அறையணிநாதர்’ என்ற பெயர் பெற்றார். “அறை’ என்றால் “பாறை’ என்றும், “அணி’ என்றால் “அழகு’ என்றும் பொருள். பாறை மீது அழகாக அமைந்திருப்பவர் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்தது.

நம்பிக்கைகள்

திருமண, புத்திர தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே, இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார். சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர், அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்பது விசேஷம். இங்கு நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரு சனீஸ்வரருக்கும் எள் படைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள காலபைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும். அம்பாள் பொன்னழகி தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். திருவண்ணாமலை சென்ற ரமண மகரிஷி வழியில் இக்கோயிலுக்கு வந்து அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன்பின்னரே திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரகண்டநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top