Saturday Jul 27, 2024

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கும்பகோணம்

முகவரி

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், குருநாதன் பிள்ளை காலனி, தாராசுரம், கும்பகோணம், தமிழ்நாடு 612702. தொலைபேசி எண் 0435 241 7157.

இறைவன்

இறைவன்: ஐராவதேஸ்வரர் இறைவி: தெய்வநாயகி

அறிமுகம்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் இராஜராஜனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 2004-ல் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டது. இக்கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறம் அமைந்துள்ளது. கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.

புராண முக்கியத்துவம்

இரண்டாம் இராசராசன் ஆண்டகாலத்தில் இந்த கோவில் ராஜராஜேஸ்வரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் அது காலப்போக்கில் தாராசுரம் என்ற பெயரில் மாறிவிட்டது. ஐராவதேசிவரரின் துணைவி தெய்வநாயகி அம்பாளாக திகழ்கின்றாள். ஐராவதேஸ்வரர் கோயிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோயில் அமைந்துள்ளது. மகாலட்சுமி ஒரு முறை துர்வாச முனிவருக்கு ஒரு மாலையை பரிசாக அளித்தார். அதனை முனிவர் இந்திரனுக்கு கொடுத்தார். இந்திரனும் அந்த மாலையை வாங்கி தன் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தார். அந்த யானை மாலையைத் தரையில் போட்டு தன் காலால் மிதித்து விட்டது. இதை கண்ட துர்வாச முனிவருக்குக் கோபம் வந்தது. அந்த யானையை கோபத்தோடு பார்த்தார். “நான் கொடுத்த மாலையை அவமதித்த நீ, தேவலோகத்தில் இருக்க தகுதி இல்லை. காட்டு யானையாக பூலோகத்தில் சுற்றித் திரிய வேண்டும்.” என்று சாபம் அளித்தார். வெள்ளை உருவம் கொண்ட யானை கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தப்பட்ட யானையானது இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கியதால் அதன் சாபம் நீக்கப்பட்டது. இதனால் தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இதற்கு சான்றாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு மற்றொரு புராணக் கதையும் உண்டு. தேவர்களை எல்லாம் அழித்து, அசுரர்கள் இந்த உலகை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, மரணமற்ற வாழ்வினை பெற, தாரகாசுரன் என்ற அரக்கன் இந்த கோவிலில் இறைவனை பூஜித்து, தவம் இருந்து, தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இந்த இடம் தாராசுரம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. எமதர்மன் சாபம் பெற்றதால் உண்டான உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால் இங்கு உள்ள குளம் “எமதீர்த்தம்” என அழைக்கப்படுகிறது.

நம்பிக்கைகள்

இந்தக் கோவிலில் உள்ள துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் நான்கு வாரங்கள் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட பெண்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு உள்ள ஐராவதேசுவரரை வழிபடுவதன் மூலம் கோப குணம் குறைந்து, மனதில் நிதானமும், பொறுமையும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது. வல்லுனர்களால், “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும். முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.

திருவிழாக்கள்

பிரதோஷம், பெளர்ணமி, சிவராத்திரி

காலம்

12 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தாராசுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top