Tuesday Oct 08, 2024

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம் – 625 214. போன்: +91-4543-258987, 94431 92101

இறைவன்

இறைவி: ஜெனகை மாரியம்மன்

அறிமுகம்

ஜெனகை மாரியம்மன் கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தானில் பாயும் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறையில் சந்தன மாரியம்மன் நின்ற நிலையிலும், ஜெனகை மாரியம்மன் அமர்ந்த நிலையிலும் காட்சியளிக்கிறார். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் அமைந்த இடத்தை முன்னர் ஜெனகாயம்பதி, சதுர்வேதிமங்கலம், சோழாந்தக சதுர்வேதி மங்கலம், ஜெனநாத சதுர்வேதி மங்கலம் என்று அழைத்ததாக கோவில் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது. இந்த மருத்துவக் கோயிலில் குடிகொண்டுள்ள ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார். ஜெனகை மாரியம்மன் குடிகொண்டுள்ள இந்த ஊர் இராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் ஜெனகபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. மேலும் மாரியம்மனுக்கு ஜெனகை மாரியம்மன் எனப்பெயர் சூட்டப்பட்டது. இக்கோயில் தல விருட்சம் வேப்பமரம் மற்றும் அரசமரம் ஆகும். இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஜெனகை மாரியம்மன் பெயரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஜயதசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடும் திருவிழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மையாகும்.

புராண முக்கியத்துவம்

ரேணுகாதேவி ஜமதக்கினி முனிவரை மணம் முடித்து பரசுராமரை பெற்றெடுக்கிறாள். கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் நீர் முகந்திடும்போது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை நீரிலேகண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் உடம்பெல்லாம் நனைந்ததை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டிக் கொண்டு வரும் படி கூற அவ்வாறே அன்னையின் தலையை பரசுராமர் கொண்டுவந்தார். இருப்பினும் பெற்ற தாயை வெட்டிய கையை வெட்டி விட்டேன் என்று கூற முனிவரும் வரம் கேள் தருகிறேன் என்று பரசுராமரிடம் கூறினார். தன் தாயை உயிர்ப்பித்து கொடுக்கும்படி கேட்டார். முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்தார். அதைபெற்றுக் கொண்டு வெட்டுப்பட்டுக் கிடக்கும் தன் தாய் சடலம் அருகே சென்று தவறுதலாக தாயின் தலையை வேறொரு பெண்ணின் உடம்போடு ஒட்ட வைத்து தண்ணீரை தெளி்க்க உயிர் பெற்றார். அதனால் அந்த உயிர் அரக்கி ஆகின்றது. அதன் ஆக்ரோஷம் அதிகமாகிறது. அதன் ஆக்ரோஷம் அடங்கும் பொருட்டு இத்தலத்தில் அமைதிவடிமாக மாரி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இன்னமும் கர்ப்பகிரகத்தில் அம்மனுக்கு பின்புறம் சந்தனமாரி எனும் நின்ற நிலையிலான ஆக்ரோஷ ரேணுகாதேவி காட்சி தருகிறாள்.

நம்பிக்கைகள்

அம்மை போட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு குணமடைவது இப்பகுதியில் மிகவும் பிரபலம். குழந்தை பாக்கியம், திருமண வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். விவசாய செழிப்பு, தொழில் விருத்தி, கல்வி மேம்படுதல் போன்ற பிரார்த்தனைகளும் இத்தலத்தில் நிறைவேறுகின்றன. கை கால் ஊனம், மற்ற உடல் குறைபாடுகள், பிணி பீடை ஆகியன விலகவும் இத்தலத்து அம்மனை வணங்கினால் தீர்வு கிடைக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

அம்மை நோய் தீருதல் : அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம். எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது. வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில். அனைத்து ஜீவராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.

திருவிழாக்கள்

வைகாசி பெருந்திருவிழா – 17 நாட்கள் – கொடி ஏற்றம் – சிங்கவாகனத்தில் புறப்பாடு – 8ம் நாள் தீச்சட்டி – 9ம் நாள் பால்குடம் பூப்பல்லக்கு அன்று இரவு புஷ்பபல்லக்கில் அலங்கார வீதியுலா பூக்குழி இறங்குதல் தை மாத பிறப்பு, சித்திரை வருட பிறப்பு, நவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அம்மனுக்கு நடைபெறும். வருடத்தின் விஷேச நாட்களான பொங்கல் தீபாவளி பண்டிகைகளின் போதும் கோயிலில் பெரிய அளவில் பக்தர்கள் வருகை இருக்கும். விஜய தசமி அன்று வைகை ஆற்றில் அம்பு போடுதல் திருவிழா மிகவும் விஷேசமாக இருக்கும். அந்த விழாவின் முடிவில் மழை தூரல் விழுவது இன்றும் நடக்கும் அதிசயமான உண்மை.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top