Wednesday Jul 24, 2024

குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் திருக்கோயில், இராணிப்பேட்டை

முகவரி

அருள்மிகு திருவந்தீஸ்வரர் திருக்கோயில், குடிமல்லூர், வாலாஜாபேட்டை வட்டாரம், இராணிப்பேட்டை மாவட்டம் – 632513

இறைவன்

இறைவன்: திருவந்தீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி

அறிமுகம்

குடிமல்லூர் வாலாஜாவில் இருந்து பாலாறு அணைக்கட்டு செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி, ஒரு காலத்தில் குடமல்லிகை நிறைந்த காடாக இருந்ததால் ‘குடமல்லிகா வனம்’ என்று அழைக்கப்பட்டதாம். இப்போது குடிமல்லூர் என்றாகிவிட்டது. இங்கே அம்பாள் திரிபுரசுந்தரியுடன் அழகுற கோயில் கொண்டுள்ளார் திருவந்தீஸ்வரர். அத்ரி வழிபட்டதால் அத்திரீஸ்வரர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

காஞ்சியில் சிவ-பார்வதி திருமணம் நடந்தது. அந்தத் திருக்கல்யாணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் மற்றும் ஏனையோரும் அங்கே கூடினர். அகத்தியர், கௌதமர், பரத்வாஜர், காசியபர், அத்ரி, வசிஷ்டர், வால்மீகி ஆகிய சப்த முனிவர்களும் வந்திருந்தனர். கல்யாணக் கூட்டத்தால் காஞ்சி மாநகரமே நிரம்பி வழிந்தது. முனிவர்கள் எழுவரும் தங்களின் நித்திய கடமைகளை இடையூறின்றி நிறைவேற்ற வேண்டி, அருகிலிருந்த வனப் பகுதிகளுக்குச் சென்றனர். அந்த எழுவரில் 6 முனிவர்கள் வணங்கிய இடங்கள், ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் (ஆறு காடுகள்) என்று சிறப்புப்பெற்றன. அவர்களில் அத்ரி முனிவர் தவம் இருந்த இடம்தான் குடிமல்லூர். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு, தியாகராஜ ஐயரும் அவரின் சகோதர் முனிரத்தின ஐயரும் சிவாலயம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், கட்டுமானப் பணிக் காக பாலாற்றங்கரையில் மணல் கொண்டு வர சென்றபோது, அங்கே சுயம்பு வடிவாய் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம், புராணக் காலத்தில் அத்ரி முனிவரால் பூஜிக்கப்பட்டது என்பதை அறிந்து, அந்த லிங்க மூர்த்தத்தை தாங்கள் கட்டிவந்த கோயிலில் எழுந்தருளச் செய்தார்களாம். அத்ரி மகரிஷி அமர்ந்த நிலையில் இருந்து சிவனை பல காலம் பூஜித்ததால், அவருக்குச் சிவனருள் கைகூடியதாம். இதையொட்டி இந்த ஆலயத்தில், அமர்ந்த நிலையில் உள்ள அத்ரி முனிவரின் திருமேனியை, கருவறைக்கு எதிரே இறைவனை நோக்கி ஸ்தாபித்துள்ளனர். அவர்கள் 1898-99-ம் வருடம் கோயிலை கட்டி முடித்து குடமுழுக்கு செய்துள்ளனர். இந்த விவரங்களை கருவறைக்கு வெளியே மேற்கூரையில் உள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். பிற்காலத்தில் 1978, 1998 ஆகிய வருடங்களில் மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

நம்பிக்கைகள்

இங்கு வந்து அம்பாள் மற்றும் திருவந்தீஸ்வரர் சந்நிதியில் தீபங்கள் ஏற்றிவைத்து, மனதார வணங்கி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷம், சோமவாரம் முதலான சிவ பெருமானுக்கு உகந்த நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிவனாரை மும்முறை வலம் வந்து மனமுருகிப் பிரார்த்தித்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்; வேண்டிய வரம் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

ஆலய நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் மேற்குப்புறத்தில் சிவன், பார்வதி, விநாயகர் திருமேனிகள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் இடப்புறம் கல்யாண மண்டபமும், விநாயகர் சந்நிதியும் உள்ளன. வலம் வரும்போது கொடி மரம், பலிபீடம், நந்திதேவரை தரிசிக்கலாம். பிரமாண்ட மதில் சுவரில் அடிகொன்றாக அகல் விளக்குகள் பதிக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் கருவறையில் ஈசன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறையின் வெளிபுற சுவர்களில் வண்ண ஓவியங்கள் அழகூட்டுகின்றன. அம்பாள் திரிபுரசுந்தரி தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்கிறாள். நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, முருகப் பெருமான், பிரம்மா, மகாவிஷ்ணு, துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், மற்றும் நாக மூர்த்தங்களையும் இங்கே தரிசிக்கலாம். நவகிரகங்களுக்கும் தனிச் சந்நிதி உண்டு.

திருவிழாக்கள்

வருடம் தோறும் மகா சிவராத்திரி திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

காலம்

12-13 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குடிமல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வாலாஜாபேட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top