Monday Sep 16, 2024

ஓலையாம்புத்தூர் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில்

முகவரி

ஓலையாம்புத்தூர் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், ஓலையாம்புத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்

இறைவன்

இறைவன்: அருணாசலேஸ்வரர் இறைவி: உண்ணாமுலையம்மை

அறிமுகம்

சீர்காழிக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓலையாம்புத்தூர் என்னும் சிறு கிராமம். முன்னூறு ஆண்டுகளின் முன்னம் இது ஒரு பாளையத்தின் தலைமையிடமாக திகழ்ந்திருக்கிறது. நாயக்க மன்னர்களுக்கு வரி வசூல் செய்த குறுநிலத்தவர். கி.பி. 18 ஆம் நூற்றாண்டுவரை ஓலையாம்புத்தூர் கச்சிராயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரியவருகிறது. அதன் பிறகு “வண்ணமுடையார்” என்ற குலப் பட்டமுடைய வன்னிய குலத்தவர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அவர்களது தலைமையிடமான வண்ணமுடையார் இன்று குன்னம் எனப்படுகிறது. இவர்கள் தொடக்க காலத்தில் குன்னம் என்ற ஊரிலும் பின்னர் செங்கமேடு என்ற ஊரிலும் இருந்தனர். செங்கமேட்டில் வசித்த வண்ணமுடையார்களுக்கும் ஓலையாம்புத்தூர் கச்சிராயர்களுக்கும் தொடர்ந்து சண்டை சச்சரவு இருந்து வந்தது.இந்த இரு குடும்பத்தாருமே இதற்கு தீர்வு காண விழைந்தனர். செங்கமேடு அம்பலவாண வண்ணமுடையாருக்கு கச்சிராயரின் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். இதன் மூலம் வண்ணமுடையார்-கச்சிராயர் மோதல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வண்ணமுடையார்களும் ஓலையாம்புத்தூருக்கு வந்து நிரந்தரமாக தங்கிவிட்டனர். அந்த கருப்பு-வெள்ளை காலம் உருண்டோடி ஆண்டுகள் முன்னூறாகி விட்டது. தற்போது… இவை ஏதும் அறிந்திராத வண்ணம் பெரும் வயல்காட்டின் நடுவில் சிறிய திட்டு போல் கிராமம், சீர்காழி பகுதியில் கடந்த 100 வருடங்களாகப் பாய் தயாரிப்பு தொழிலில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. தைக்கால், ஓலையாம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கோரைப் புற்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி பதப்படுத்தி பாயாக்கி விற்கப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

பழம் வரலாற்றுக்கு சான்றாக இன்றிருப்பது ஒரு சிவாலயம். கிழக்கு நோக்கி பெரிய திடலின் மையத்தில் உள்ளது எதிரில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. பெருங்கோயிலும் பல சிதைவுகளுக்கு உள்ளாகி இன்று ஒரு வரி கவிதையாக உள்ளது. உயர்ந்த கீழ்த்தளம் கொண்ட முகப்பு மண்டபமும் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டும் இறைவன் அருணாசலேஸ்வரரும் தெற்கு நோக்கி இறைவி உண்ணாமுலையம்மையும் உள்ளனர். மண்டபத்தின் வெளியில் சிறு மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறை வாயிலில் பெரிய விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை-முருகன் உள்ளார். பிரகாரத்தில் பின்புறம் பெரிய அளவிலான ஐந்து லிங்கங்கள் மாடங்களில் இருத்தப்பட்டுள்ளன. இவை பெருங்கோயில் சுற்றாலை மண்டபத்தில் இருந்தவை ஆகலாம். கருவறை கோட்டத்தில் சிறிய தென்முகனும், சிறிய துர்க்கையும் உள்ளனர். சண்டேசரும் உள்ளார். முகப்பு மண்டபத்திலேயே சூரிய சந்திரர்கள் உள்ளனர். நவகிரகங்களில் சில உடைந்தும் காணாமலும் போயுள்ளனர். நந்திக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள சிமென்ட் தளம் நெல் கொட்டும் களமாகவும், கோயிலிருக்கும் பெரும் திடல், அறுவடை வண்டிகள் நிறுத்துமிடமாகவும் மாறியுள்ளது. ஊருக்குள் கேட்பாரற்ற சொத்து சிவனோடது தான் என்பது போல ஒருபுறம் பள்ளி கட்டிடம், மேல்நிலை நீர்த்தொட்டி கட்டி வைத்த அரசாங்கம். மூல மூர்த்திகளை தவிர வேறொருவருக்கும் எண்ணை வஸ்த்ரங்கள் சார்த்தப்படாத நிலை, நிவேதனம், தீபம், புஷ்பம் இவை கிடைப்பது எப்போது? இதற்க்கு பின்னர் வருவது தான் பூஜை, புனஸ்காரம், ஆகமம் மற்றும் 1000 கோடி நதிகள் கடலில் கலக்கும்போது தன் பெயரை வடிவத்தை வேகத்தை இழந்து விடுகின்றன. அதேபோல மனிதன் தன் பெயர். பதவி .சொத்துக்கள் இவை மீதான ஆசை விடுத்து பரமாத்மாவிடம் ஒன்றி கலந்து விட வேண்டும் – இதை உணர்த்துவதே அபிஷேக தத்துவம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

18 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஓலையாம்புத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top