Saturday Jul 27, 2024

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்-620 003. திருச்சி மாவட்டம். போன் +91- 431-276 8546, 94439-19091, 97918 06457

இறைவன்

இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள் இறைவி: காந்திமதி அம்மை, குங்குமவல்லி

அறிமுகம்

உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும். உறையூர் பகுதியானது முக்கீச்சுரம் என்றும், கோழியூர் என்றும் புராணக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு. முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் “திருமூக்கீச்சுரம்’ என்று பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

சிறப்பு அம்சங்கள்

ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான். இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பஞ்சவர்ணேஸ்வரர் பெயர்க் காரணம் உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார். நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளஹஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உ<ள்ளடக்கி இங்கே <உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்’ என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப் பிடத்தக்கது. உதங்க முனிவர் இத்தலத்துக்கு வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர் என்பவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடியபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது. வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்காலவழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார். ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது. தோஷ நிவர்த்தி பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய் பிறை, அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. <<<உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார். இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர். இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

திருவிழாக்கள்

சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உறையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top