Saturday Jun 15, 2024

இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்-612 303. தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 435 200 0157, 96558 64958

இறைவன்

இறைவன்: எழுத்தறிநாதேஸ்வரர் இறைவி: சுகுந்தா குந்தளாம்பிகை

அறிமுகம்

இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலிலுள்ள இறைவன் எழுத்தறிநாதேஸ்வரர், அட்சரபுரீஸ்வரர், தாந்தோன்றிஸ்வரர், ஐராவதேஸ்வரர். இறைவி பூங்குழல் அம்மை, சுகந்த குந்தளாம்பிகை, நித்தியகல்யாணி

புராண முக்கியத்துவம்

சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, “”ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?” என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன்,சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு “எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. “அட்சரம்’ என்றால் “எழுத்து’. இது சுயம்புலிங்கம் என்பதால் “தான்தோன்றீயீசர்’ என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதியும் ஆக இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு “இனன்’ என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் ” இனன் நம்பு ஊர்’ என்று பெயர் ஏற்பட்டு “இன்னம்பூர்’ என்று மாறிவிட்டது.

நம்பிக்கைகள்

பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் அட்மிஷனுக்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அநுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி. வலதுபுறத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சன்னதி. இந்த அம்பாளே பிரதான அம்பாளாக இருக்கிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். * நவராத்திரி காலத்தில் இவ்வாறு செய்வது மிகுந்த சிறப்பைத்தரும். பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் இக்கோயிலில் அர்ச்சனை செய்தால் நல்வாக்கு பெறுகிறார்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படுகிறது. * குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும் இங்கு வந்து வழிபட்டு செல்லலாம். இங்கே அம்பாள் தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். இவளை “நித்தியகல்யாணி’ என அழைக்கின்றனர். மற்றொரு அம்பாளான “சுகந்த குந்தல அம்பாள்’ தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனித்து வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்கள் இவளை வழிபடலாம். இது சூரியன் பூஜித்த தலமாகும். “இன்னன்’ என்றால் “சூரியன்’ என பொருள். “இன்னன் நம்பூர்’ என பெயர் இருந்து “இன்னம்பூர்’ என மாறிவிட்டது. பங்குனி 13,14,15, ஆவணி 31, புரட்டாசி 1,2 ஆகிய தேதிகளில் சூரிய வெளிச்சம் சுவாமிமீது படுகிறது.

திருவிழாக்கள்

நவராத்திரி 10 நாட்கள், சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top