Tuesday Sep 17, 2024

அருள்மிகு விஷமங்களேஸ்வரர் திருக்கோயில், துடையூர்

முகவரி

அருள்மிகு விஷமங்களேஸ்வரர் திருக்கோவில் துடையூர் துடையூர் அஞ்சல் மணச்சநல்லூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் PIN – 621213

இறைவன்

இறைவன்: விஷமங்களேஸ்வரர் இறைவி: வீரமங்கலேஸ்வரி

அறிமுகம்

துடையூர் ஓர் அழகிய கிராமம். சாலையின் இடதுபுறம் ஆலயமும், வலதுபுறம் கிராமமும் இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்த அந்த ஆலயத்தின் பெயர் விஷமங்களேஸ்வரர் கோவில் என்பதாகும். அந்த காலத்தில் இந்த ஊர் கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. எனவே இங்குள்ள ஆலயத்தில் உள்ள இறைவன் ‘கடம்பவனேஸ்வரர்’ என அழைக்கப்பட்டார். இறைவியின் பெயர் மங்களாம்பிகை. தற்போது இறைவன் ‘விஷமங்களேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது. பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன், இத்தலத்து இறைவனை வழிபட்டு ஜோதிட ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன் தனி மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் உள்ளன. ஆலய முகப்பைக் கடந்ததும் மகாமண்டபம் உள்ளது. வாசலின் வலதுபுறம் பைரவரும், இடதுபுறம் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தன்னுடைய தேவியர்களுடனும் அருள்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றிய சிவபெருமான் கொடுமையான விஷத்தையே மங்களமாக மாற்றியதால் விஷமங்களேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவியின் பெயரும் மங்களநாயகி. இவர்களை வழிபட அனைத்து மங்களங்களும் கிட்டும் என்பது உறுதி. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு, ஜோதிடக் கலையில் தலை சிறந்த நிபுணனாகத் திகழ்ந்தான். துரியோதனின் மனைவி பானுமதி இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. அசல நிசுமித்ர மகரிஷி, இன்றும் தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வருவதாக ஐதீகம் உண்டு.

நம்பிக்கைகள்

இத்தலத்திற்கும் மகா பாரதத்திற்கும் தொடர்பு உண்டு. கிருஷ்ண பகவான் ஒரு நாள் திருதராஷ்டிரரின் அரண்மனைக்கு வந்தார். நாகங்களால் பீமன் கடிபடுவான் என அறிந்திருந்த கிருஷ்ணன் பெறுவதற்கரிய மலைப்பவள சீந்தில் (மூலிகை) இலைக்கொடியை பீமனின் இடுப்பில் கட்டிவிட்டார். இந்த இலைக்கொடி எத்தகைய நச்சுத் தன்மையையும் போக்க வல்லது. இதை அறிந்த காந்தாரி, இந்த இலைக்கொடி தன் பிள்ளைக்கும் வேண்டும் என கேட்க, கிருஷ்ணன் துரியோதனனுக்கும் மலைப்பவள சீந்தில் இலைக்கொடியை கட்டிவிட்டார். சிறுவனான துரியோதனனுக்கு ஒரு சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து விடும்போது, துரியோதனன் இடுப்பில் கட்டப்பட்டிருந்த சீந்தல் இலைக்கொடி காந்தாரியின் கையில் பட்டு அறுந்து வந்து விட்டது. மேலும் சிறிது நாட்கள் துரியோதனன் இடுப்பில் இருந்ததால் அவனது ஆயுள் தொடையில் இருப்பதையும் காந்தாரி அறிந்தாள். பின்னர் தன் மகனின் உயிரை காக்க என்ன செய்யலாம் என்று அசலநிசுமித்திர மகரிஷியிடம் காந்தாரி வேண்டினாள். அதற்கு அவர், ஊருகம் (ஊரு = தொடை) என்ற சிவ தலத்தைப் பற்றி கூறினார். ஊரு என்று மட்டும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த தற்போதைய துடையூர் தலத்தில் உள்ள விஷமங்களேஸ்வரரை வழிபட்டு வரும்படி மகரிஷி தெரிவித்தார். ஆனால் மகரிஷி தந்த பரிகார பலன்களை துரியோதனன் அலட்சியம் செய்தான். ஆனால் குருஷேத்திர யுத்தத்தின் தொடக்கத்தில் காந்தாரி, துரியோதனனுக்கு இதை நினைவூட்டினாள். அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல் தொலைவு கடந்து வரவேண்டி இருந்ததால் துரியோதனனால் கடைசி வரை இத்தலத்திற்கு வர இயலாமல் போயிற்று என்று புராணத்தோடு இந்த ஆலயம் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கிறது. இத்தல இறைவன் விஷமங்களேஸ்வரர் என அழைக்கப்படுவதற்கு ஒரு கதை உண்டு. இந்த இறைவன் மேல் பக்தி கொண்டு தினமும் வழிபட்டு வந்தார் ஒரு பக்தர். அவர் ஒருநாள் கூட இத்தலத்திற்கு வந்து இறைவனை தரிசிக்காமல் இருந்ததில்லை. ஒருநாள் ஆலயம் வரும் வழியில் அவரை நாகம் ஒன்று தீண்டிவிட்டது. உடல் முழுவதும் விஷம் பரவத் தொடங்கியது. பதறிப்போன பக்தர், இறைவனின் ஆலயம் நோக்கி ஓடி வந்தார். உயிர் பிரியப்போவது உறுதி என்ற நிலையில், இறைவனின் காலடியில் போய் விழுந்தார். இறைவனின் காலடியில் தன் உயிர் பிரியவேண்டும் என்று அவர் நினைத்தார். அவருக்கு இரங்கிய இறைவன், விஷத்தை நீக்கி அருளினார். பக்தர் புத்துயிர் பெற்று எழுந்தார். இதனால்தான் ‘கடம்பவனேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டு வந்த இறைவன், ‘விஷமங்களேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

சிறப்பு அம்சங்கள்

இத்தலம் ஒரு விஷக்கடி நிவர்த்தி தலகாக கருதப்படுகிறது. இவ்வூரில் விஷஜந்துக்கள் யாரையும் தீண்டுவதில்லை என்று கூறப்படுகிறது.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விஷமங்களேஸ்வரரை ஒரு தாம்பாளத்தில் 12 தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் விஷக்கடி துன்பங்கள் மற்றும் விஷக்கடியை விட கொடியதாய் கருதப்படும் பகைமை, குரோதம், விரோதம், பொறாமை, பேராசை, வன்முறை போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்தி பெறக்கூடும். மேலும் இங்குள்ள வீணாதர தட்சிணாமூர்த்தியை வழிபட தல்ல கல்வியறிவு பெற்றிடலாம்

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

துடையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top