Sunday Aug 25, 2024

அருள்மிகு கைலாசநாதர் கோயில், தென்திருப்பேரை

முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம்

இறைவன்

இறைவன்: கைலாசநாதர்

அறிமுகம்

குதிரை, நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம். ஆனால், இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் வித்தியாசமான அமைப்பை தரிசிக்கலாம். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

அகத்தியரின் சீடர் உரோமசர் சிவதரிசனம் பெற விரும்பினார். அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி தீர்த்தத்தில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார். அதில், ஏழாவது மலர் கரையொதுங்கிய தலம் இது. இங்கு கைலாசநாதர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள், சுவாமிக்கு பச்சை நிற ஆடை சாத்தி, பாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். கைலாசநாதருக்கு வலப்புறத்தில் அம்பிகை அழகியபொன்னம்மை சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கிறாள். அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒருசமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர், ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி,”இந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தரமுடியாது” என சொல்லிவிட்டார். கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம்,”இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சுப் போடு” என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்டமுடியாமல் ஒரு இளநீரை பறித்துப்போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்துவிட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்தத் தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்துவிட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.

நம்பிக்கைகள்

இங்குள்ள நந்திக்கு, தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்வது விசேஷம். இவ்வூரில் உள்ள மகரநெடுங்குழைக்காதர் (பெருமாள்) கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோயில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்கும் ஊர் என்பதால் இங்கு வந்து பெருமாளையும், கைலாசநாதரையும் வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலில் கால பைரவர், ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இவர் வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால், இவருடன் நாய் வாகனம் இல்லை. பவுர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இங்கு வல்லப விநாயகர், சக்தி விநாயகர், கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்களைத் தரிசிக்கலாம். பெரிய கோட்டையை உடைய ஊரை “பேரை” என சொல்வார்கள். இவ்வூர் தமிழகத்தின் தெற்கே இருப்பதால், தென்திருப்பேரை என்று பெயர் பெற்ற பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர், திருச்செந்தூர் முருகனைப்போல வலது கையில் தாமரை மலருடன் காட்சி தருவது விசேஷம். இவருடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

காலம்

2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தென்திருப்பேரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்திருப்பேரை

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top