Monday Jun 24, 2024

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் – மிருகசீரிடம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், எண்கண்-612 603, திருவாரூர் மாவட்டம். Phone: +91 4366-269 965, 94433 51528.

இறைவன்

இறைவன் – ஆதிநாராயணப்பெருமாள் இறைவி – ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே பெருமாளுக்கு இத்தலத்தில் நித்யகருட சேவை சாதிக்கப்படுகிறது. மிருகசீரிடம் நட்சத்திரர்களுக்குரிய தலமாகும். மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: விசாலமான புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், அனுமன், கருடன் சன்னதி உள்ளது. திருவாரூர் தியாகராஜர், திருக்கண்ணமங்கை, நாச்சியார் கோவில், திருச்சேறை ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.

புராண முக்கியத்துவம்

ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தான். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்தது. இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிட நட்சத்திரத்திற் குரிய கோயிலாக போற்றப்படுகிறது.

நம்பிக்கைகள்

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள், தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நாட்களில் இங்கு வழிபாடு செய்கிறார்கள். படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் இங்கு தரிசிக்கலாம். கருட பகவானும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது இம்மூர்த்தியின் சிறப்பாகும். மூலவர் தனித்தும், உற்சவர் ஸ்ரீபூமி, நீளாதேவி சமேத நாராயணப் பெருமாளாகவும் காட்சி அளிக்கிறார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, கருட பஞ்சமி, கோகுலாஷ்டமி, இராம நவமி.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top