மோகம்பரிகுப்பம் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி :
மோகம்பரிகுப்பம் ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில்,
மோகம்பரிகுப்பம், விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607804.
இறைவன்:
மோகாம்பரேஸ்வரர் / ஏகாம்பரேஸ்வரர்
அறிமுகம்:
விருத்தாசலம் – பாலக்கொல்லை சாலையில் உள்ள ஆலடியை தாண்டியதும் கொட்டாரகுப்பம் பேருந்து நிறுத்தத்தின் கிழக்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இருளக்குறிச்சி , அங்கிருந்து இரண்டு கிமீ தூரம் சென்றால் மோகாம்பரிகுப்பம் உள்ளது. ஊரை தாண்டி வடகிழக்கு பகுதியில் உள்ளது இந்த சிவன்கோயில். கோயிலின் வடபுறம் ஒரு பெரிய குளம் உள்ளது. விநாயகர், சிவன் இருவருக்கும் ஒரே அளவுடைய கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோயில் கிழக்கு நோக்கியது, இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவன் எதிரில் நந்தி ஒன்றுள்ளது. இறைவன் கருவறையை ஒட்டியபடி விநாயகர் கோயில் ஒன்றும் இதனையொத்த அளவில் உள்ளது. பெரிய அளவிலான விநாயகர் அதில் உள்ளார். அவரின் எதிரில் ஒரு மூஞ்சூறு வாகனம் உள்ளது. இப்பகுதியில் உள்ள சிவாலயங்கள் பெரும்பாலும் அம்பிகையின்றி தனித்த சிவன்கோயில்களாகவே உள்ளன. இதனால் இவை 6-ம் நூற்றாண்டின் பிந்தையதாகவும் 1௦-ம் நூற்றாண்டிற்கு முந்தையதாகவும் இருக்கலாம். திருக்கோயில் சுற்றி அழகிய வண்ண மலர் செடிகள் வைக்கப்பட்டு, காம்பவுண்டும் எழுப்பப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம் :
மோகம் என்றால் இச்சை; அம்பரம் என்றால் ஆடை; இச்சையை தூண்டகூடிய வகையில் ஆடையை அணிந்தவரே மோகம்பரர். யார் இந்த மோகாம்பரர்? இறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பத்தவர்களை நல்வழிப்படுத்தத் திருவுளம் கொண்ட ஈசனார், திருமாலை மோகினி வேடத்தில் வரச்செய்து, தாம் வெண்ணீறு பூசி, பாதங்களில் பாதக்குறடு தாங்கி, வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக கருணை பொழியும் கண்களும், காண்பாரை மயக்கும் கட்டழகும், பிறந்தமேனியுமாய் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் அழகிய பிச்சாண்டவர் கோலத்தில் சென்றார். இவரையே மோகாம்பரர் என்பர். இவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, அவர் பின்னே சென்றனர். மோகினியின் அழகில் முனிவரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். இந்த இறைவனின் பெயரால் தான் மோகாம்பரர் குப்பம் என அழைக்கப்பட்டு பின்னர் மோகம்பரிகுப்பம் ஆனது. இந்த லிங்கமூர்த்தியும் மோகாம்பரேஸ்வரர் என அழைக்கப்பட்டார் . ஆனால் ஊர் மக்கள் இவரை ஏகாம்பரேஸ்வரர் என அழைக்கின்றனர்.









காலம்
6-10 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மோகம்பரிகுப்பம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி