மஞ்சகொல்லை ஞானலிங்கேஸ்வரர் சிவன்கோயில் (குமரன்கோவில்), நாகப்பட்டினம்

முகவரி :
மஞ்சகொல்லை ஞானலிங்கேஸ்வரர் சிவன்கோயில் (குமரன்கோவில்),
மஞ்சகொல்லை, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611106.
இறைவன்:
ஞானலிங்கேஸ்வரர்
இறைவி:
ஞானவல்லி
அறிமுகம்:
நாகப்பட்டினத்தின் மேற்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது மஞ்சக்கொல்லை. சாலை ஓரத்திலேயே உள்ளது கோயில். இங்குள்ள குமரன் கோவில் கந்த சஷ்டி விழாவிற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது. நாகப்பட்டினம் நகரில் இருந்து, சிக்கல் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில், மஞ்சக்கொல்லை திருத்தலம் அமைந்துள்ளது. பிரதான சாலையோரம் இருப்பதால் சாலை வழி சிக்கல், நாகை செல்வோர் தரிசனம் செய்வது எளிது. ஞானலிங்கேஸ்வரர் மூலவராக இருந்தாலும், இந்த ஆலயத்தை குமரன்கோவில் என்றே அழைக்கின்றனர்.
புராண முக்கியத்துவம் :
தேவலோகத்தில் ஒரு சமயம் பேரழகியான திலோத்தமையின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அவளின் நடனத்தைக் கண்டு ரசித்த பிரம்மனுக்கு, அவள் மீது மோகம் ஏற்பட்டது. அதை அவளிடம் கூறினார். அதற்குத் திலோத்தமை `படைப்புத் தொழிலைச் செய்யும் தாங்கள் எனக்கு தந்தை போன்றவர். நான் உங்கள் மகள் போன்றவள்’ என்று கூறி, பிரம்மனின் விருப்பத்தை மறுத்தாள். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், ‘நீ பூமியில் தாசியாக பிறப்பாய்’ என சாபமிட்டார். தன் மீது தவறேதும் இல்லாத நிலையில் சாபமிட்ட பிரம்மன் மீது கோபங்கொண்டாள், திலோத்தமை. ‘உன்னுடைய தவறை சற்றும் உணராமல் சாபமிட்ட உனக்கு, பூமியில் தனியே ஆலயம் இல்லாது போகட்டும்’ என்று திலோத்தமையும் பதில் சாபமிட்டாள். இருவரின் சாபமும் பலித்தது.
திலோத்தமை காஞ்சீபுரத்தில் தாசி குலத்தில் தோன்றினாள். பருவமடைந்த அவள், விதிப்பயனால் அந்தணன் ஒருவனின் சாபத்துக்கு ஆளாகி தன் அழகை இழந்தாள். சாப விமோசனம் வேண்டி பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபட்டாள். நிறைவாக ‘குங்குமாரண்யம்’ என்று அழைக்கப்படும் மஞ்சக்கொல்லை தலம் வந்தாள். அன்றைய தினம் கார்த்திகை மாதம், ஞாயிற்றுக்கிழமையில் அங்குள்ள ஞானத் தீர்த்தத்தில் நீராடி, ஞானலிங்கப் பெருமானைத் தரிசித்ததும் அவளின் சாபம் நீங்கியது. தன் இயல்பான அழகிய உருவம் பெற்றாள். அப்போது வானில் புஷ்பக விமானம் வந்திறங்கியது, அதிலேறி தேவலோகம் சென்றால் திலோத்தமை. ஆனால் பிரம்மன் லிங்க வழிபாடு செய்யவில்லை, சாபம் நிலைத்துவிட்டது.
சிறப்பு அம்சங்கள்:
இந்த சாப விமோசன தலத்தில் இருக்கும் முருகனும் தனிச்சிறப்பு பெற்றவராகத் திகழ்கின்றார். சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய தீப்பொறிகளின் ஒன்றிணைப்பே முருகப்பெருமானின் அவதாரம் என்கின்றது புராணங்கள். இத்திருவிளையாடலின் போது பார்வதி அச்சமடைந்து ஓடியதால், அன்னையின் சிலம்பில் இருந்து நவமணிகள் சிதறி நவசக்திகளாக உருவம் கொண்டன. சூரசம்ஹாரத்தில் முருகப் பெருமானுக்கு துணை நின்றவர்கள் ஆவர்.
இங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு முருகன் கோவிலுக்கு, ‘சஷ்டி சூரசம்காரம்’ என்ற விருத்திப் பாடலைப் பாடியபடி காலை, மாலை என இரு வேளைகளிலும் வருவது வழக்கம். சூரசம்ஹாரத்தன்று ஊர்ப் பெரியவர் ஒருவர், வேல் வகுப்பு பாடிய பிறகு, வேல் வாங்குவார். இவ்வாலயத்தில் உற்சவராக விஜய வேலாயுத சுவாமி வள்ளி-தெய்வானையோடு காட்சி தருகிறார். இவரே வீதியுலா வந்து சூரசம்ஹாரத்திலும் காட்சிதருவார்.
பிரதான சாலையோரம் கிழக்கு நோக்கிய ஆலயம், முகப்பில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் அகன்ற மண்டபம் உள்ளது, அடுத்து சிறிய ராஜகோபுரம் ஒன்றுடன் கூடிய வாயில் உள்ளது. கிழக்கு முகமாய் இறைவன் ஞானலிங்கேஸ்வரர், எதிரே நந்தி தெற்கு முகமாய் அம்பிகை ஞானவல்லி, வள்ளி-தெய்வானையுடன் வெற்றி வேலாயுத சுவாமி, கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் சமயக்குரவர், சந்தானக்குரவர் என அமைந்துள்ளனர். மேற்கில் மூலகணபதி, பொய்யாமொழி விநாயகர், ஜமதக்கினி முனிவர், மகாலட்சுமி, தனி சிற்றாலயத்தில் சண்டிகேஸ்வரர், சுமத்திரசண்டர், வடகிழக்கில் நவக்கிரகங்கள், தெற்கு நோக்கிய பைரவர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட மூர்த்திகளும் அமைந்துள்ளன. இத்தலத்தின் தலமரமாக வில்வ மரமும், தலத் தீர்த்தமாக ஞானத் தீர்த்தமும் உள்ளன. மேற்கிலும் தெற்கிலும் இரு பெரிய குளங்கள் உளளன.





காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மஞ்சகொல்ல
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி