புதுக்காமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :
அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில்,
புதுக்காமூர், ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் – 632 301.
போன்: +91 94860 46908, 97891 56179, 96294 73883
இறைவன்:
புத்திரகாமேட்டீஸ்வரர்
இறைவி:
பெரிய நாயகி
அறிமுகம்:
புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, புதுகமூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஒன்பது தலைகள் கொண்ட ஆதிசேஷனின் கீழ் லிங்க வடிவில் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரரும், தனி சன்னதியில் தனி துவஜஸ்தம்பத்துடன் காணப்படும் அவரது துணைவியார் பெரிய நாயகி அம்மனும் முதன்மை தெய்வம். இக்கோயிலில் உள்ள உற்சவர் சோமாஸ்கந்தர் ஆவார். வேலூரில் இருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஆரணி நகரில் இக்கோயில் உள்ளது.
தல விருட்சம்: பவளமல்லி
தீர்த்தம்: கமண்டல நதி
புராண முக்கியத்துவம் :
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினர். குழந்தைப்பேறு உண்டாவதற்கு வழி சொல்லும்படி, தன் குலகுரு வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார். அதன்படி தசரதர், இவ்விடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, ரிஷ்யசிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். இதன்பின், அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் “புத்திரகாமேட்டீஸ்வரர்’ என்றே பெயர் சூட்டினார்.
நம்பிக்கைகள்:
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள், புத்திரகாமேட்டீஸ்வரரை வழிபட, விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
தசரதர் சன்னதி: ஒருசமயம் ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டி நதியாக பெருக்கெடுத்த தீர்த்தம், கமண்டல நதி எனப்பட்டது. இதன் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே மட்டும் இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்நதியில் தண்ணீர்ணீ பெருக்கெடுத்து ஓடும். மூலஸ்தானத்தில் சிவன், 9 தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரியநாயகிக்கு, தனிக் கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. கோயிலுக்கு நேரே வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிக்கிறார். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார். விழா நாட்களில் இவருக்கு பூஜை உண்டு.
குழந்தை பாக்கிய தலம்: குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டுத் தலம் இது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள், புத்திரகாமேட்டீஸ்வரரை வழிபட, விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஆறு திங்கள் கிழமைகள் விரதமிருக்க வேண்டும். முதல் திங்களன்று விரதம் துவங்கி, மதியம் மட்டும் ஒரு குழந்தைக்கு அன்னம் கொடுத்து, பின் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அன்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள் கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீஸ்வரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு 11 சிவாச்சாரியார்கள், “புத்திரகாமேஷ்டி யாகம்’ நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதக ரீதியாக 5ம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள். இவ்விரு பூஜைகளுக்கும் கட்டணம் உண்டு.
திருவிழாக்கள்:
ஆடி (ஜூலை ஆகஸ்ட்) சுவாதி நட்சத்திர நாளில் ஒரு லட்சம் தீபம் ஏற்றுவது, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் புரட்டாசி நவராத்திரி மற்றும் பிப்ரவரி மார்ச் மாதத்தில் மாசி சிவராத்திரி ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.









காலம்
ஆண்டுகள் பழமையானது நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுக்காமூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆரணி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி