தெத்தி அக்னீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
தெத்தி அக்னீஸ்வரர் சிவன்கோயில்,
தெத்தி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611001.
இறைவன்:
அக்னீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
நாகூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் தெத்தி சாலை பிரிகிறது, அதில் இரண்டு கிமீ தூரம் சென்றால் உள்ளது இந்த சிவன் கோயில். நாகூர் புறவழிச்சாலை வழியாகவும் இக்கோயில் அடையலாம். கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம்
இறைவன் அக்னீஸ்வரர் இறைவி ஆனந்தவல்லி கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார் அவருக்கு முகப்பு மண்டபம் போல முன்னிழுத்து கட்டியுள்ளனர். வடக்கில் துர்க்கைக்கு கோஷ்டம் உள்ளது. பிரகாரங்களில் சிற்றாலயங்கள் ஏதுமில்லை, வடக்கில் பெரிய ஒரு பலா மரம் ஒன்று நிற்கிறது. வடகிழக்கில் சனி பைரவர் என சிறிய மண்டபம் ஒன்றில் உள்ளனர். தெற்கு நோக்கிய தனி சிற்றாலயம் ஒன்று அனுமனுக்கு கட்டப்பட்டுள்ளது. இது புதிய சேர்க்கையாக இருக்கலாம். காலை மாலை என இருவேளை பூஜை நடக்கிறது. கோபுர வாயிலில் உள்ள கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் பிலவங்க வருடம் ஆவணி மாதம் முன் கோபுரம் கட்டப்பட்டது எனும் தகவல் உள்ளது வருடம் 1907 ஆக இருக்கலாம். முழுமையாக படிக்க முடியாமல் வண்ண பூச்சுடன் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இறைவன் பெயர் அக்னீஸ்வரர். இறைவனை எதிர்த்து தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட அக்னி சாபம் பெறுகிறார், இதனால் தனது சக்தி குறைவதை உணர்ந்த அக்னி பகவான் பல தலங்களில் லிங்கம் அமைத்து வழிபடுகிறார், அவ்வாறு வருகையில் கடற்கரை தலத்தில் வழிபடுதல் சாலச்சிறந்தது என இங்கு வந்து லிங்கம் அமைத்து வழிபட்ட இடம் தான் இந்த தெத்தி. கிழக்கு நோக்கிய கருவறை அவரின் முன்னம் கூம்பு வடிவ முகப்பு மண்டபம் உள்ளது. இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இவை நாயக்கர் கால அமைப்பு என்று சொல்லாமல் சொல்கின்றன. கருவறை வாயிலில் சிறிய விநாயகர் உள்ளார். கருவறையில் இருபுறமும் சன்னதிகள் உள்ளன. இடது புறம் வழக்கமாக விநாயகர் இருப்பார் இங்கே மகாலட்சுமி உள்ளது ஏன் என அறியமுடியவில்லை. வலதுபுறம் வழமை போல் முருகனும் வள்ளி தெய்வானையுடன் உள்ளார்.
சிறப்பு அம்சங்கள்:
கல்வெட்டில் தேத்தி எனப்படுகிறது. நாகப்பட்டினத்தில் ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவம் நடைபெறும். அப்போது, மன்னன் சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இப்படி பஞ்சகுரோச தலங்களில் ஒன்று இந்த தெத்தி.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெத்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி