திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி :
திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவன் கோயில்,
திருவாதிரைமங்கலம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611105.
இறைவன்:
சிவலோகநாதர்
இறைவி:
சங்கர நாயகி
அறிமுகம்:
திருவாதிரைமங்கலம் சற்று உள்ளடங்கிய கிராமம்தான், திருவாரூர்- நாகூர் சாலையில் உள்ள சூரனூர் வந்து அங்கிருந்து தெற்கில் 1½ கிமி தூரத்தில் வெட்டாற்றின் கரையோர பகுதியில் உள்ள இவ்வூரை அடையலாம். கிராமத்தின் முகப்பில் பெரிய குளத்தின் கரையோரம் இந்த ஆலயம் அமைந்துள்ளது. தற்போது காணும் கோயில், பழம் கோயிலிலை முற்றிலும் அப்புறப்படுத்திய நிலையில் கட்டப்பட்ட கோயில் பழம்கோயிலின் சாயல் இன்றி, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கும் விஷயம் என்றாலும் உள்ளே இருக்கும் மூலமூர்த்திகள் பழமையானவர்களே. அரசின் உதவி இருந்திருந்தால் பழங்கோயில் போலவே செய்திருக்கலாம்.
அரைவட்ட வளைவு கொண்ட நுழைவு வாசல், நான்கு புறமும் சுற்றுசுவர், இறைவன் சிவலோகநாதர் வட்ட வடிவ ஆவுடையார் கொண்டு கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி சங்கர நாயகி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். உயர்ந்த முகப்பு மண்டபம் இரு கருவறைகளையும் இணைக்கிறது அதன் வெளியில், நந்தி பலிபீடம் உள்ளது. முகப்பு மண்டபத்தில் இடதுபுறம் விநாயகர் வலது புறம் வள்ளி/தெய்வானை சமேத முருகன் உள்ளனர். . கருவறைச் சுற்றில் தெற்கே தக்ஷணமூர்த்தி, வடக்கே துர்க்கை, , வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. உட்புறத்தில் அரளிப் பூச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. தல மரம் செங்காலி மரம் தீர்த்தம் எதிரே உள்ள சிவகங்கை தீர்த்தம் இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் மீது, பங்குனி மாதத்தில் முதல் 20 நாட்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் படுவது சிறப்பு. திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சிவலோகநாதர் கோயில்.
சிறப்பு அம்சங்கள்:
ஊரின் மத்தியில் இல்லாமல் கோயில் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளதால், பல ஆண்டுகளாக வருவோர் போவோர் இன்றி கோயில் தனித்து விடப்பட்டது. முட்புதர்கள் மண்டிப்போய் கிடந்தது. இதனை பல முறை கண்டு வருந்திய இந்த ஊரை சேர்ந்த Rtd RMS-ராதாகிருஷ்ணன் என்ற 82 வயது சிவனடியார், தன் மகனிடம் ஆலயத்தை திருப்பணி செய்யும் தன்னுடைய எண்ணம் பற்றி கூற குடும்பமே கோயில் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டது. 2013- 2016 வரை திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்தக் கோவிலின் திருப்பணிக்காக பூமியைத் தோண்டியபோது, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையின் உற்சவத் திருமேனிகள் கிடைத்தன. இவை பிற்காலச் சோழர்களின் காலத்தை உறுதி செய்வதாக இருந்தது. பாதுகாப்பு கருதி, அறநிலையத்துறை பாதுகாப்பறையில் உள்ளது.
இரண்டு கல்வெட்டுக்களும் கிடைத்தன, இக்கல்வெட்டின் முழுப்பகுதிகள் கிடைக்காத நிலையில், கிடைத்த துண்டு கல்வெட்டுகளில் ஒன்று, இத்தலம் ‘திருவாதிரைமங்கலம்’ என்பதையும், இறைவி ‘சங்கரநாயகி’ என்பதையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. திருவாதிரைமங்கலம் சோழமன்னர்கள் ஆட்சியில், பனையூர் நாட்டில் அமைந்த ஊராக இருந்துள்ளது.
இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் விநாயகர், சிவலோகநாதர், சங்கர நாயகி, சண்டிகேசுவரர், ஆகியவை பிற்காலச்சோழர் காலமான கி.பி.12, 13-ம் நூற்றாண்டினை சேர்ந்தது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்பு இங்கிருந்த கோயில் சோழர்களின் செங்கல்தளி என கூறலாம். . முன்பிருந்த ஆலயம் பிற்காலச் சோழர்களின் கலைநயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.









காலம்
கி.பி.12 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாதிரைமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி