திருச்சின்னபுரம் அனந்தீஸ்வரர் சிவன் கோயில், கடலூர்

முகவரி :
திருச்சின்னபுரம் அனந்தீஸ்வரர் சிவன் கோயில்,
திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608303.
இறைவன்:
அனந்தீஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட சிவாலயங்கள் உள்ளன, அவற்றில் ஐந்து மட்டுமே பாடல் பெற்றவை இவற்றினைமட்டுமே சிவனடியார்கள் தரிசனம் செய்கின்றனர், மீதமுள்ளவை உள்கிராமங்களில் பழுதுற்று காட்சியளிக்கின்றன. அவற்றில் ஒன்று திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வடக்கில் மூன்று கிமீ தொலைவில் வீராணம் ஏரிக்கரையினை ஒட்டி, உள்ளது.
அகத்தியர் வழிபட்டதாக சொல்லப்படும் அகத்தீஸ்வரர் லிங்கம் மகாமண்டபத்தில் உள்ளது. ஒரு காலத்தில் பெரிய சிவாலயமாக இருந்து பின்னர் தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளது. கோயில் 1.03 ஏக்கர் பரப்பில் உள்ளது. மீதமுள்ள பகுதிகள் பள்ளிக்கும் அரசு கட்டிடங்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பிள்ளைமார்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட, பல சிறப்புக்கள் உள்ள இக்கோயில் ஒரு கால பூஜைக்கு வந்துவிட்டது. காட்டுமன்னார்கோயில் அர்ச்சகர் ஒருவரால் நித்தியபூஜை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் வண்ண பூச்சுக்கள் சுத்தம் செய்யப்பட்டால் புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்படலாம்.
புராண முக்கியத்துவம் :
கோயில் முகப்பில் அருகில் ஒரு பெரிய அரசமரமும், அதனடியில் சில நாகர்களும் உள்ளனர். முகப்பில் நந்தி மண்டபத்தின் பின் ஒரு பழமையான விநாயகர் வைக்கப்பட்டு உள்ளார். இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார்.
கருவறை வாயிலில் இது கருங்கல் துவாரபாலகர்கள் உள்ளனர். தலைக்கு மேலே குடையுடன், நின்ற கோல விநாயகர், இவர் கோஷ்ட விநாயகராகலாம் மற்றும் ஒரு அமர்ந்த நிலை விநாயகரும் உள்ளனர், அருகில் அகஸ்தீஸ்வரர் என ஒரு லிங்கம் உள்ளது. மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகன்உள்ளனர். அப்பர் சம்பந்தர் சிலைகளும் உள்ளனர், கையில் உழவார கருவி இல்லாத நிலையில் அப்ப ரா என அறியமுடியவில்லை. . அருகில் ஆதிகேசவ பெருமாள் மாற்றம் மகாலட்சுமியும் உள்ளனர். சில பழைய சிலைகளும் ஓரிடத்தில் உள்ளன. கருவறை கோட்டத்தில் தக்ஷ்ணமூர்த்தி, கருவறை பின்புறம் உமாமகேஸ்வரர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். வடகிழக்கில் பெரிய வில்வ மரமொன்றும் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயிலில் சிறியதும் பெரியதுமாக 41 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு உள்ளன. பத்தாம் நூற்றாண்டு காலம் முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு காலகட்டம் வரையிலான கல்வெட்டுக்கள் உள்ளன. கொற்றமங்கலத்து சேர்ந்த பிராமணன் சோதிபட்டன் என்பவன் சந்தி விளக்கு உபயமாக அளித்த செய்தி – கிழக்கு சுவர் இறைவன் முன்னர் வைக்கும் நுந்தா விளக்கு அளிக்கப்பட்ட செய்தியும் இதில் இறைவன் பெயர் திருசோற்றுணை ஈஸ்வரமுடையார் என அழைக்கப்பட்டுள்ளார்.
அனந்த நாராயண பட்டன் என்பவரின் மனைவி விளக்கெரிக்க 2 காசுகள் கொடை அளித்த செய்தி அம்மன் சன்னதி கிழக்கு சுவரில் உள்ளது. விளத்தூர் நாட்டு வேளாண் திருசோற்றுணை ஈஸ்வரமுடையார் கோயில் சிவபிராமணர்கள் வசம் ஒரு காசு அளித்து சந்தி விளக்கு எரிக்க ஏற்பாடு செய்துள்ளமை குறித்த கல்வெட்டு.
மகா மண்டபத்தின் தெற்கு சுவற்றில் இவ்வூர் சபையில் ஆண்டு தோறும் கிராம காரியம் செய்யும் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட ஓலை ஆவணமாக இது உள்ளது – அதிக மழை பெய்தமையின் காரணமாக பராந்தக பேரேரியின் கரை உடைந்து போயுள்ளது இதனை சீர்படுத்த வேண்டியும் இதற்காக இவ்வூர் இறைவனிடம் வேண்டுதல் செய்வதற்கும் திருசோற்றுனை ஈசுவரமுடையாருக்கு நிலம் வழங்கிய செய்தியாக இக்கல்வெட்டு உள்ளது.

















காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சின்னபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி