திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி
அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா- 609 110, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-274 175.
இறைவன்
இறைவன்: சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர் இறைவி: ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள்
அறிமுகம்
திருக்கோலக்கா – சப்தபுரீஸ்வரர் கோயில் பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 15வது தலம் ஆகும். சம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் கொடுத்து அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
புராண முக்கியத்துவம்
பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
நம்பிக்கைகள்
வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், “”ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,’ என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்
இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள்.திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.
திருவிழாக்கள்
சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கோலக்கா
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி