திரியம்பகபுரம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
திரியம்பகபுரம் திரியம்பகேஸ்வரர் சிவன்கோயில்,
திரியம்பகபுரம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612603.
இறைவன்:
திரியம்பகேஸ்வரர்
அறிமுகம்:
கும்பகோணம் – திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பண்ணையூர் பேருந்து நிறுத்தத்தின் வடக்கில் 5 கி.மீ சென்று குடமுருட்டியின் கிளை ஆற்றின் தென்கரையில் 2 கிமீ சென்றால் திரியம்பகபுரம் அடையலாம். திருவிடைச்சேரியிலிருந்து தெற்கில் 3 கி.மீ பெரும்பண்ணையூர் ஊராட்சியின் கீழ் இலந்தவனசேரி, கோவில்பத்து, திரியம்பகபுரம், மருதமாணிக்கம் ஆகிய ஊர்கள் உள்ளன.
எளிமையாகவும் அழகாகவும் கிழக்கு நோக்கி கோயில் கட்டப்பட்டுள்ளது, கோயிலுக்கு வழி தென்புறம் உள்ளது. இக்கோயிலின் முக மண்டபத்தின் வெளியில் ஒரு சதுரஆவுடை லிங்கம் உள்ளது அவரே கண்டெடுக்கப்பட்ட லிங்கம் என நினைக்கிறேன். இவருக்கு ஒரு தகர கொட்டகையாவது அமைத்திருக்கலாம். கருவறையில் உள்ள லிங்கமும் சதுரஆவுடை லிங்கமாகவே உள்ளது, இவரே திரியம்பகேஸ்வரர் எனப்படுகிறார். எதிரில் ஒரு அழகிய நந்தியும் பலிபீடமும் உள்ளன. இவரது கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். தென்புறம் நோக்கியவராக அம்பிகை சௌபாக்கியகௌரி உள்ளார். அருகில் அருணகிரிநாதர் பாடிய பாடலின் கல்வெட்டும், தலவரலாறும் உள்ளது, இறைவனை நோக்கியவாறு அருணகிரிநாதர் சிலை ஒன்றும் உள்ளது. கோட்ட தெய்வங்கள் ஏதுமில்லை. பிரகாரங்களில் தென்னை வாழை மரங்கள் செழிப்பாக வளர்ந்திருக்க காண்கிறோம். சற்று உள்ளடங்கிய கோயில் தான் எனினும் தன்னை தானே வெளிப்படுத்திக்கொண்ட ஈசனல்லவா தேடி வருபவர்க்கு அள்ளித்தரும் சௌபாக்கியவதியையும் உடன் வைத்துள்ளார், பிறகென்ன!
புராண முக்கியத்துவம் :
தமிழகத்தில் ‘திரியம்பகபுரம்’ என்ற பெயர் கொண்ட ஒரே திருத்தலம். இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்ட இவ்வூர் பத்து ஆண்டுகளின் முன்னம் தேட வேண்டிய நிலையில் இருந்தது. சேங்காலிபுரம் ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் மற்றும் அவரது உறவினர்களுக்கும் குல தெய்வமான பாலசாஸ்தா கோயில் இந்த திரியம்பகபுரத்தில் வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. “த்ரியம்பக புராதீசம் பஜே பூதயே” என்று முடியும் சாஸ்தா ஸ்லோகம் இதனை உறுதி செய்கிறது. இதனை அடையாளமாக வைத்து திரு வலையப்பட்டி எஸ்.கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் தேடிச் சென்றபோது, இறைவனின் திருவருளால் வயலின் நடுவே ஒரு சிறு மேட்டில் சதுர ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி கிடைத்தது. இவரே அருணகிரிநாதர் பாடல் பெற்ற திரியம்பகேஸ்வரர் என ஒரு இறுதி முடிவுக்கு வந்தனர். 29-1-2012 அன்று விநாயக பூஜை, பூமி பூஜை செய்யப் பட்டு 25-3-2015 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திரியம்பகபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி