Friday Dec 27, 2024

தாராசுரம் வீரபத்திரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி

தாராசுரம் வீரபத்திரர் சிவன்கோயில் தாராசுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 702 .

இறைவன்

இறைவன்: வீரபத்திரர்

அறிமுகம்

கும்பகோணத்தை ஒட்டி அமைந்துள்ளது தாராசுரம். தாராசுரத்தில் ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் வீரபத்திரர் கோயில் எனப்படும் ஒட்டக்கூத்தரின் சமாதி ஆலயம் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் வடகிழக்கில் ஒரு மரத்தடியில் பழங்கால செங்கல் மேடை ஒன்று காணப்படுகிறது . சோழர் காலத்தில் பள்ளிப்படையும், வீரபத்திரர் ஆலயமும் கற்றளியாக இருந்து பின்னாளில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோபுரம் மற்றும் பிற பகுதிகளில் காணப்பெறும் சோழர் கால கல்வெட்டுகளின் உடைந்த பகுதிகள் வாயிலாக இதனை ஊகம் செய்யமுடிகிறது. தற்போது வீரசைவ பெரியமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை நீலகண்ட சாரங்க தேசிகேந்திரமஹா சுவாமிகள் அருளாட்சி செய்கிறார். கிழக்கு நோக்கிய பெரிய வளாகத்துடன் கூடிய திருக்கோயில். மையத்தில் உள்ள கருவறையில் நின்ற கோலத்தில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவற்றை நான்கு கரங்களிலும் பிடித்த நிலையில் வீரபத்திரர் காணப்படுகின்றார் . பத்திரகாளி தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார், வாயில் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் இடிந்த நிலையில் உள்ளது. எட்டு தூண்களுடன் கூடிய எண்கோண மண்டபத்தில் நந்தி உள்ளது. வீரபத்திரர் கருவறை, கருவறையின் பின்புறம் ஒட்டக்கூத்தர் சமாதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் காணமல் போக சில பகுதிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளது ஈசான்யமூலையில் வேம்பாச்சாரியார் எனும் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர் சமாதி உள்ளது .

புராண முக்கியத்துவம்

ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன் , இரண்டாம் இராஜராசன் ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (திருவெறும்பியூர் ) பிறந்தார். இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு. கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் ‘ஒட்டம்’ (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார். இவர் எழுதியது தக்ஷயாக பரணி, அண்டத்துபரணி, ஈட்டிஎழுபது, உத்தரராமாயணம் ஆகியன. இத்தலத்தில் தான் ஒட்டக்கூத்தர் தக்கயாக பரணி பாடினார், அதுவும் ஒரு சுவையான கதை தான். ஒருமுறை ஒட்டக்கூத்தர் இத்தல வீரபத்திரரை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தபோது ஊர் மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர் அவர்களுக்கு பயந்து ஒட்டக்கூத்தர் அருகில் இருந்த முளைச்சாளம்மன் சன்னதியில் புகுந்து கதவினை சார்த்திக்கொண்டார். ஊர் மக்களும் விடாமல் கதவருகில் காத்து நின்றனர். அவர் செய்வதறியாது அம்மனை வேண்ட அம்மன் அவருக்கு காட்சியளித்து வீரபத்திரர் தக்கனின் யாகம் அழித்த பெருமையை போற்றி பாடு அவர் உன்னை காப்பாற்றுவார் என கூற ஓட்டகூத்தரும் அவ்வாறே தக்கயாக பரணியை பாடினார். பின்னர் இத்தலத்திலேயே தங்கி மக்களுக்கு நல்லறம் போதித்தார் பின்னர் ஆவணி உத்திராடத்தில் சமாதியடைய, இவரது பள்ளிப்படை கோயில் கருவறை பின்புறம் கட்டப்பட்டது. இரண்டாம் இராஜராஜன் தனது ராஜகுருவாக இருந்த ஒட்டக்கூத்தரின் மீது மிகுந்த அன்பும் ,மரியாதையும் கொண்டிருந்ததால் , வீரபத்திரருக்கு சிறந்த கோயில் அமைத்தும் ,தனது அரசவை தலைமை புலவர் மறைவுக்குப்பின் அந்தக்கோயிலிலேயே அவருக்கு சமாதியும் அமைத்தார் . சமாதியின் மேல் ஒரு சிறிய லிங்கம் காணப்படுகிறது. தனது குருவின் மேல் கொண்ட பற்றின் காரணமாக இரண்டாம் இராஜராஜன் தனது மறைவுக்கு பின் ஒட்டக்கூத்தரின் சமாதி அருகில் தனக்கும் ஒரு பள்ளிப்படை அமைத்துக்கொண்டார் என்கின்றனர். அது இரண்டாம் இராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதப்படுகிறது. இவ்வாறு பரணி பாடி ஒரு ஊரேயே தனது பெயரால் பெற்றதும் , அவரின் வழிபடுதெய்வமான வீரபத்திரருக்கு ஒரு கோயில் கட்டிக்கொடுக்கப்பட்டதும் அவரது மறைவுக்கு பின் அவரின் சமாதி அங்கேயே அமைக்கப்பட்டதும் , அவரது சமாதிக்கு அருகிலேயே தனது பள்ளிப்படையை மன்னன் அமைத்துக்குக்கொண்டதும் என இத்தனை சிறப்புடன் தமிழ் புலவர்கள் வரலாற்றில் வாழ்ந்திருப்பது பெருமைக்குரியது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தாராசுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top